For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகங்கையில் ப.சிதம்பரம் Vs ராதிகா- சரத் அறிவிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

Radhika Sarath kumar
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 15 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், சிவகங்கை தொகுதியில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் சரத்குமார் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்வது நேற்று தொடங்கியது. 28ம் தேதி வரை இந்த மனுக்கள் வாங்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் தொகுதிக்கு ரூ.5,000 செலுத்த வேண்டும்.

தென் மாவட்டங்களில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து 25ம் தேதி (நாளை) மதுரையில் சரத்குமார் விருப்ப மனுக்களை வாங்குகிறார். இந்த மாத இறுதிக்குள் வேட்பாளர் பரிசீலனை முடிந்து வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது.

தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேற்று சரத்குமார் விண்ணப்பங்களை பெற்றார். தென்காசி, திருவள்ளூர், மத்திய சென்னை ஆகிய 3 தொகுதிகளுக்கு கட்சியின் பொருளாளர் செல்வராஜ் விண்ணப்பித்தார். அவரைத் தொடர்ந்து வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.வி.ரத்தினம், வக்கீல் பன்னீர் செல்வம், இளைஞர் அணி செயலாளர் கராத்தே சரவணன், வடசென்னை மாவட்ட செயலாளர் சேவியர், நாகப்பன் உள்பட பலர் மனு செய்தனர்.

வடசென்னையில் சரத்குமார், தென்சென்னையில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் செய்யப்பட்டன. முதல்நாளில் மொத்தம் 51 பேர் மனுக்கள் வாங்கினர். இவற்றில் 26 பேர் சரதிகுமார் திருநெல்வேலியில் போட்டியிடக் கோரி மனுதாக்கல் செய்தனர்.

இந்த விருப்ப மனு அளிப்பு நிகழ்ச்சியின் போது சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் கூட்டணி முடிவு செய்யப்படும். இந்த மாதம் 30ம் தேதி வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அடுத்த மாதம் 5ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறேன்.

எங்கள் கட்சிக்கு இந்தத் தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.இந்த 15 தொகுதிகளை அடையாளம் கண்டு பாஜகவிடம் கேட்டிருக்கிறோம்.

அரசியல்ல இதெல்லாம் சகஜம்...

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். நான் ஏற்கனவே அந்த தொகுதியில் போட்டியிட்டு 6 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது உண்மைதான். வெற்றியையும், தோல்வியையும் சமமாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ராதிகா சரத்குமார் சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவார். (இங்கு காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி)

தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை மற்ற கட்சிகளை பின்பற்றாமல் விவசாயம், பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்படும். முற்போக்கான சிந்தனைகள் இடம்பெறும். பல கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்களை அறிவிக்கின்றன. இலவச டி.வி, கியாஸ் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை கொடுத்து அவர்களின் சொந்த காலில் நிற்க வைக்க வேண்டும்.

இப்போது சில கட்சிகள் கூட்டணிக்காக பேரம் பேசும் அரசியலை நடத்தி வருகின்றன. அவர்களுக்கு கொள்கை இல்லை. மாற்றம் வேண்டும் என்றால், அதை சொல்ல வேண்டும். எடுக்கும் முடிவுகளில் உறுதி வேண்டும். கூட்டணி வேண்டுமா? இல்லையா? என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்.

கார்த்திக் கட்சியையும்...

கூட்டணியில் கார்த்திக் கட்சியையும், புதிய தமிழகம் கட்சியையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தக் கட்சிகளையும் இணைத்து ஒரு பலமான கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். இன்னும் கூட கட்சிகள் இந்தக் கூட்டணிக்கு வரலாம், என்றார் சரத்குமார்.

விஜய்காந்துக்கு அதிகமாக மக்கள் கூட்டம் கூடுகிறதே என்று கேட்டதற்கு, நானும் ராதிகாவும் பிரச்சாரத்துக்குப் போனால் அதை விட இரு மடங்கு கூட்டம் கூடுகிறது என்றார் சரத்.

திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவை மறந்துவிட்டார் போலிருக்கிறது..!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X