'அஞ்சாநெஞ்சனை' மதுரையில் சந்திக்க அச்சமில்லை - வரதராஜன் பதிலடி
சென்னை: மதுரையில் அழகிரி நடத்திய அட்டூழியங்கள் அனைவருக்கும் தெரியும். அவரை தேர்தலில் சந்திக்க நாங்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை என்று கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன்.
இது குறித்து வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
15வது மக்களவைத் தேர்தல் களத்தில் இந்தியத் திருநாடு எத்தனையோ மாற்றங்களை சந்தித்து வருகிறது.
தமிழ்நாட்டில், பாஜக - காங்கிரஸ் இரண்டையும் தோற்கடிப்பது என்ற அரசியல் முடிவின் அடிப்படையில் அஇஅதிமுகவுடன் தொகுதி உடன்பாடு கண்டு மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலை சந்திக்கிறது.
மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிற மூன்று தொகுதிகளில் மதுரையும் ஒன்று. இதில் திமுக சார்பில் அழகிரி வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார். இது அந்தக் கட்சி யின் முடிவு.
ஆனால் அழகிரி வேட்பாளர் என்று பேசப்பட்டு வந்த நேரத்திலேயே, மார்க்சிஸ்ட் கட்சி மதுரை தொகுதியில் போட் டியிடவே அஞ்சுகிறது என்று ஊடகங்களில் கற்பிதமான செய் திகள் உலவவிடப்பட்டன.
அரசியல் நாகரீகமற்ற கருணாநிதி..
இப்போது திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞர் தனது கடிதத்திலேயே, “அழகிரியைக் கண்டு ஏன் இவ்வளவு அஞ்சு கிறார்கள்?" என்று அரசியல் நாகரீகமற்ற முறையில் வினா எழுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி விடு தலைப் போராட்டக்காலத்திலும், அதற்கு பின்னரும் தனது நீண்ட நெடிய அரசியல் போராட்டத்தில் எதிரிகளின் அராஜக வன்முறை யையும், ஆட்சியாளர்களின் அடக் குமுறையையும் நெஞ்சுரத்தோடும், துணிவோடும் சந்தித்து எண்ணிறந்த தியாகத் தழும்புகளைத் தாங்கி நிற்கின்ற மகத்தான பெரு மையைப் பெற்றிருக்கிறது.
இந்த வரலாறுதான் ஏற்கெனவே கலைஞர் கருணாநிதியையே, நான் பெரியாரையும், அண்ணாவையும் என் வாழ்வில் சந்தித்திராவிட் டால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்டாகி இருப்பேன் என்று பேச வைத்தது. அவற்றையெல்லாம் மறந்துவிட்டு தேர்தலுக்காக அபத்தமான கருத்துக்களை முன் வைப்பது அவருக்கு சமீபகால வழக்கமாகியிருக்கிறது.
3 உயிர்களைப் பறித்தவர் அழகிரி ..
மதுரையில், 'அஞ்சா நெஞ்சன்" என்று திமுகவினரால் அழைக்கப்படுகிற அழகிரியின் அராஜகங்களும், அத்துமீறல்களும் நாடறிந்த ஒன்று. தினகரன் பத்திரிகையில் ஒரு சர்வே வெளி யிடப்பட்டதையொட்டி மதுரை யில் அந்த பத்திரிகை வளாகத் தில் மூன்று அப்பாவி உயிர்கள் பலி கொள்ளப்பட்டன.
ராயல் கேபிள் விஷன் என்ற போட்டி நிறுவனம் தொடங்கப்பட்ட போது, அங்கே கேபிள் ஆப்பரேட்டர்கள் அச்சுறுத்தப்பட்டதும்,
சன் டி.வி யின் இணைப்பு கேபிள்கள் பிடுங்கி எறியப்பட்டதையும் இன்று ஒன்றிணைந்துள்ள கலைஞர் குடும்பத்தின் மாறன் சகோதரர்களே கடுமையாக விமர்சித்தனர்.
ஒரு திரைப்படத்தையே மதுரையில் வெளியிடாமல் தடுத்ததும், அது பிரச்சனையான பின்னர் முதலமைச்சரே தலையிட நேர்ந்ததும் சமீபகால நிகழ்வுகள்.
இந்தப் பின்னணியில்தான் மதுரை தொகுதியில் தேர்தலையொட்டி அராஜகத்துக்கும் அத்து மீறல்களுக்கும் அடிக்கோள் இடப்பட்டு வருவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்க நேரிட்டது.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள விதத்தில் மதுரையில் 90 ஆயிரம் புதிய வாக்காளர் பதிவுக்கான முயற்சிகள் நடைபெற்றுள்ள தையும், அஞ்சாநெஞ்சனின் ஆட் படைகள் தங்கள் கைவரிசையைக் காட்டத் திட்டம் தீட்டி வருவதையும், திருமங்கலம் பாணியில் 'கரன்சி அபிஷேகத்தால்" மதுரைத் தொகுதியைத் திக்குமுக் காடச் செய்ய தயாராகி வருவதையும், ஆளும் கட்சிக்கு சாதகமான நாளேடுகளும், ஊடகங்களுமே கூட விரிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளன.
இந்நிலையில் தேர்தலை நியாய மான முறையில் நடத்திடவும், முறைகேடுகள் நிகழாமல் தடுக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்து நேரடி நடவடிக்கையில் ஈடுபட நேர்ந்தது இயல்பே.
நரகல் நடையில்...
இதை சகித்துக் கொள்ள இயலாமல், திமுக தலை மை நரகல் நடையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடுத்துள்ளது கண்டனத்துக் குரியது.
இந்தப் பின்னணியில் எதிர் வரும் தேர்தலை அரசியல் ரீதியாக மார்க்சிஸ்ட் கட்சி சந்திக்கும். அராஜக அரசியல் நடவடிக்கைகளுக்கு முடிவுகளை எழுதும்.
மார்க்சிஸ்ட் கட்சி 'அஞ்சுவது அஞ்சாமை பேதமை" என்ற வள்ளுவன் வாக்கையும் அறிந்து வைத்திருக்கிறது. 'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே" என்ற பாரதியின் முழக்கத்தையும், கையேந்தி நிற்கிறது. 'நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்" என்ற தமிழ் மூதாட்டியின் அறிவுரையை திமுக தலைவர் தான் தொலைத்துவிட்டு நிற்பதாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications