தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான அலை-ராமதாஸ்
சேலம்: தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக அலை வீசுகிறது. இதில் சிக்கி திமுக கூட்டணி தோல்வியைச் சந்திக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் சேலத்தில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் மோதுகின்றன. காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செம்மலையும் கோதாவில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நேற்று சேலத்தில் நடந்தது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்த தேர்தலோடு பாமக காணாமல் போய்விடும் என ஒரு அமைச்சர் கூறியுள்ளார். மே 16ம் தேதிக்கு பின்னர் யார் காணாமல் போவார்கள் என்பது அவருக்கு தெரியும்.
டாஸ்மாக் மட்டுமே வளர்ந்துள்ளது...
தமிழகத்தில் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது. விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். தமிழகம் டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனையில் மட்டும் வளர்ந்துள்ளது. வேறு எதிலும் வளர்ச்சி அடையவில்லை.
எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். சுகாதார வசதி கிடைக்க வேண்டும். ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள். ஏழைகள் வளர நாங்கள் பாடுபடுவோம். இதை நோக்கித்தான் நம் பயணம் இருக்க வேண்டும்.
இது தான் கலைஞர் பாணி...
முதல்வருக்கு தேர்தல் பயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் அதிமுக கூட்டணி முரண்பாடான கூட்டணி என்று முத்திரை குத்த பார்க்கிறார்.
சேதுசமுத்திர திட்டத்தில் அதிமுக நிலைப்பாடு வேறு, பாமக நிலைப்பாடு வேறு என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். நாள் தோறும் இதுபோன்று ஏதேதோ எழுதியும், கூறியும் வருகிறார்.
கொள்கைக்கு மாறுபட்ட கட்சிகளுடன் திமுக அணி சேர்ந்தால் அதற்கு ஒரு விளக்கம் சொல்வார், ஆனால் மற்றவர்களை குறை கூறுவார். இதுதான் கலைஞரின் பாணி. திமுக-காங்கிரஸ் தான் முரண்பாடான கூட்டணி. இரண்டு கட்சிகளும் நூற்றுக்கு நூறு கொள்கைகளில் முரண் பாடானவை.
அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி. நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அந்த அளவிற்கு தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணி இயற்கையில் அமைந்த கூட்டணி, இதை நாங்கள் சொல்ல வில்லை. காங்கிரஸ் கட்சியினரே சொல்கிறார்கள். மத்தியில் நல்ல ஆட்சி ஏற்படும். இதற்கு அன்பு சகோதரி, நல்ல பிரதமரை தேர்ந்தெடுப்பார்.
திமுகவுக்கு எதிரான அலை...
இலங்கை தமிழர் பிரச்சினையை திமுகவும், காங்கிரசும் கை கழுவி விட்டனர் என்பதை அறிந்து தமிழக வாக்காள பெருமக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிரான அலை வீச ஆரம்பித்து இருக்கிறது.
இதுதவிர விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர் குலைவு, திமுகவினரின் அராஜகம், அரிசி கடத்தல், மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, போலீசாரின் அராஜகம், அரிசி, பருப்பு வகைகள், எண்ணை ஆகியவை விலை பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்காத நாளே இல்லை.
தொடரும் பட்டினி சாவு...
இலங்கை அரசு பல யுக்திகளை கையாண்டு வருகிறது. இதில் ஒன்றுதான் பட்டினி போட்டு கொல்வது. கடந்த நூறு நாட்களில் 4500 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் பேர் படுகாயம்அடைந்து உள்ளனர். அணு குண்டுக்கு நிகரான அனல் கக்கும் குண்டுகளை தற்போது பயன்படுத்தி வருகிறார்கள்.
போர் நிறுத்தம் குறித்து பல முறை பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்தோம். எங்களது எம்.பி.க்களும், மதிமுக எம்.பி.க்களும் கறுப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றத்துக்கு சென்றனர்.
ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி நல்ல முடிவை எடுத்தால் ஒழிய அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேறு வழி இல்லை. இந்த கூட்டம் கூட இந்தியா தயக்கம் காட்டி வருகிறது.
தமிழர்கள் வாழ தனி ஈழம் அமைய முயற்சி செய்ய பாடுபடுவேன் என அதிமுக பொதுச்செயலாளர் கூறி உள்ளார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்தியில் ஏற்பட போகும் புதிய ஆட்சி இலங்கை தமிழர்கள் பிரச்சினை தீர முக்கியத்துவம் தர அனைவரும் பாடுபடுவோம் என்றார் ராமதாஸ்.
30ம் தேதி வரை ராமதாஸ் பிரசாரம்..
அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் வருகிற 30ம் தேதி வரை சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
ராமதாசின் பிரசார அட்டவணையை பாமக தலைவர் ஜி.கே மணி வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம்:
20ம் தேதி திருவண்ணாமலை தொகுதியில் இருக்கும் செங்கம், 21ம் தேதி ஆரணி தொகுதிக்குட்பட்ட செஞ்சியிலும் ராமதாஸ் பிரசாரம் செய்கிறார்.
22ம் தேதி கடலூர் மற்றும் சிதம்பரத்திலும், 23ம் தேதி புதுச்சேரியில் தொகுதியில் இருக்கும் காரைக்காலிலும், நாகப்பட்டிணத்திலும், 24ம் தேதி சிதம்பரம் தொகுதியில் உள்ள ஜெயங்கொண்டத்திலும் ராமதாஸ் பிரசாரம் செய்கிறார்.
25ம் தேதி தென் சென்னையை தொகுதியை சேர்ந்த சைதாப்பேட்டை, மத்திய சென்னை தொகுதியில் உள்ள சேப்பாக்கம், வட சென்னையில் இருக்கும் தண்டையார்பேட்டை, திருவள்ளூர் தொகுதியில் இருக்கும் மாதவரம் ஆகியவற்றில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
பின்னர் 26ம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சீபுரத்திலும் 27ம் தேதி நாகர்கோவில், நெல்லை, சங்கரன் கோவில், கோவில்பட்டி ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
28ம் தேதி அவர் பிரசாரம் செய்ய சிவகங்கை, திருமங்கலம், சோழவந்தான் வருகிறார். மறுநாள் 29ம் தேதி திண்டுக்கல், மணப்பாறை, முசிறி, திருச்சியிலும், 30ம் தேதி புதுச்சேரியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மொத்தம் 11 நாள் பிரசாரம் செய்யும் ராமதாஸ் 8 நாட்கள் வட தமிழகத்திலும் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே தென் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இவற்றில் 6 நாட்கள் தனது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்ய ஒதுக்கியுள்ளார்.
திருமாவுக்கு எதிராக 2 நாள் பிரசாரம்
இலங்கை தமிழர் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகளுடன் வெகு நெருக்கமாக இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது அக்கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தனது கட்சி வேட்பாளர் பொன்னுச்சாமியை ஆதரித்து சிதம்பரத்தில் 22 மற்றும் 24ம் தேதி என இரண்டு நாட்கள் பிரசாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications