For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சொல்வது போல தனி ஈழத்தை எந்த அரசும் அமைக்காது: சோ ராமசாமி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆதரவுடன் மத்தியில் அமையும் ஆட்சியில் தனி ஈழம் அமைக்கப்படும் என ஜெயலலிதா சொல்வது தவறு. காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, இடதுசாரிகளாக இருந்தாலும் சரி தனி ஈழம் அமைய எந்த இந்திய அரசும் ஆதரவு தராது, அமைக்கவும் செய்யாது என்று கூறியுள்ளார் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி.

இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு சோ அளித்துள்ள பேட்டி...

வருகிற தேர்தலில் மக்கள் எந்தக் குறிப்பிட்ட கூட்டணிக்கும் தனித்து வாக்களிக்க மாட்டார்கள். யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது. இருப்பினும் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என நம்புகிறேன்.

கேரளாவைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸுக்கு ஆதரவான நிலை இல்லை. மாறாக, பாஜகவுக்கு குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர் என பல மாநிலங்களில் சாதக நிலை காணப்படுகிறது. எனவே பாஜகதான் தனிபபெரும் கட்சியாக உருவெடுக்கும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதன் கூட்டணிக் கட்சிகளில் திமுகவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் மட்டுமே சற்று ஆரோக்கியமாக உள்ளன. அதிலும் கூட திமுக இந்த முறை மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

அதேசமயம், பாஜகவைப் பொறுத்தவரை அதன் தோழமைக் கட்சிகளான அகாலிதளமும், ஐக்கிய ஜனதாதளமும் பெரும் வெற்றியைப் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

தேர்தலுக்குப் பின்னர் எந்தக் கட்சியும், யாருடனும் கூட்டணி வைக்கும் நிலையைத்தான் நாம் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் பார்த்து வருகிறோம். அதை போலத்தான் இந்த முறையும் நடக்கும்.

ஒவ்வொரு கட்சியும் தனக்கென சில எம்.பிக்களை வைத்துக் கொண்டு பேரம் பேச ஆரம்பிக்கும்.

ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு போன்றோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். நவீன் பட்நாயக் கூட , சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு பாஜகவை ஆதரிக்கலாம்.

பாஜகவுக்கு 170 சீட்கள் வரை கிடைத்தால் அது மதச்சார்பற்ற கட்சியாக உருவெடுக்கும். அதாவது பல மதச்சார்பற்ற கட்சிகள் அதற்கு ஆதரவு தந்து பாஜக ஆட்சியை அமைக்கும்.

150 சீட்களுக்கும் குறைவாக கிடைத்தால் அது தொடர்ந்து மதவாத கட்சியாகவே பார்க்கப்படும். அதாவது அது ஆட்சி அமைப்பது இயலாத காரியமாகி விடும்.

இருப்பினும் பாஜக மதச்சார்பற்ற கட்சியாக மாறக் கூடும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். மதச்சார்பற்ற எண்ணிக்கை, மதவாத எணிக்கைக்கு நடுவிலான எண்ணிக்கை கொண்ட எம்.பிக்களை அது பெறலாம்.

மூன்றாவது அணியில் யார் இருக்கிறார். ஜெயலலிதா பெரிய வெற்றியைப் பெறலாம். நாயுடு பெரிய வெற்றியைப் பெறலாம், ஆனால் தேவெ கெளடாவிடம் எதிர்பார்க்க முடியாது. கம்யூனிஸ்டுகள் இருக்கிற இடங்களையும் இந்த முறை இழக்கப் போகிறார்கள். வேறு யார் இருக்கிறார்கள் அங்கே..

தேர்தலுக்குப் பின்னர் மாயாவதி பிரதமராகக் கூடிய வாய்ப்புகள் அறவே இல்லை. அவரை யாருமே ஆதரிக்க மாட்டார்கள். தனது கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் போக்கு அவரிடம் கிடையாது. எனவே அவர் பிரதமராக வருவார் என நான் நினைக்கவில்லை.

ராகுல் காந்தி...

ராகுல் காந்தி இன்னும் வாக்குகளை கவரும் வகையிலான தலைவராக உருவெடுக்கவில்லை. இருப்பினும் புத்திசாலியான நபராக அவர் உருவெடுத்து வருகிறார். பேச்சுக்கும், செயலுக்கும் இடையே சம அளவிலான நிலையை அவர் வைத்துக் கொள்கிறார். கட்சிக்குள் அவர் முக்கியமான தலைவராக உருவெடுத்து வருகிறார்.

இன்னும் தீவிர அரசியலுக்கு அவர் பக்குவப்படவில்லை. அதற்கான மன நிலையில் அவரும் இல்லை. அரசியலில் வெற்றி பெற லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். லட்சியம் இல்லாமல் யாரையும் நாம் கவர முடியாது.

வருண் காந்தியுடன் ஒப்பிடுகையில், ராகுல் காந்தி முதிர்ச்சியானவராக, பக்குவப்பட்டவராக இருக்கிறார். அதில் சந்தேகமே இல்லை. வருண் காந்தி எப்படி என்றால் மீடியாக்களைக் கவரும் வகையில் பரபரப்பாக பேசவே விரும்புகிறார். இதனால் தீவிரமான கருத்துக்களைப் பேசி வருகிறார். அது சரி வராது. ஆனால் ராகுல் காந்தி அப்படிப் பேசுவதில்லை, நடந்து கொள்வதும் இல்லை.

வருண் காந்தியைப் போல பேசினால் நாளிதழ்களில் நம்மைப் பற்றி நியூஸ் போடுவார்கள் அவ்வளவுதான். ஆனால் மக்களிடம் அபிமானம் கிடைக்காது.

ராகுல் காந்தியின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, அவர் கவனிப்புக்குரியவராக இருக்கிறார். கட்சியின் தலைமைப் பீடம் நோக்கி அவர் நிதானமாக, மெதுவாக அடியெடுத்து வைத்து வருகிறார். தனக்கான நேரம் வரட்டும் என அவர் பொறுமையாக காத்திருக்கிறார்.

இன்னொரு விஷயம், காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தினர் வசம்தான் பல காலமாக இருந்து வருகிறது. காங்கிரஸாரும் கூட அதைத்தான் விரும்புகின்றனர். எனவே அந்த குடும்பத்தைச் சேர்ந்த யார் நினைத்தாலும், எந்த நேரத்திலும் தலைவர் பதவியை அடைய முடியும். பிரதமர் பதவியையும் கூட அடைய முடியும்.

இருப்பினும் கூட அந்தப் பதவிக்கு வருகிறபோது அதை அனைவரும் ஏற்கும்படியான தகுதியை வைத்துக் கொள்வது முக்கியம். அந்தத் தகுதியை தற்போது ராகுல் காந்தி வளர்த்துக் கொண்டிருக்கிறார். அது நிச்சயமாக நல்ல விஷயம்தான்.

தேர்தலுக்குப் பின்னர் மோடியை தேசிய அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால் அது பாஜகவின் கூட்டணிக் கட்சிகளின் அபிலாஷைகளைப் பொறுத்தது. சிலர் சொல்லலாம் மோடி இருக்கட்டும் என்று. சிலர் விரும்பாமல் போகலாம்.

இருப்பினும் மத்திய அரசில் மோடிக்கும் ஏதாவது பங்கு கொடுக்க பாஜக முயலலாம்.

எதிர்காலத்தில் மோடி முக்கியப் பங்கு வகிப்பவராக உருவெடுப்பார் என நான் நினைக்கிறேன். சில காலங்களுக்கு முன்பு வரை பாஜக தீண்டத்தகாத கட்சியாக இருந்தது. பின்னர் ஜார்ஜ் பெர்னாண்ட்ஸ், கருணாநிதி போன்றோரெல்லாம் வந்து சேர்ந்து கொண்டனர். பாஜகவுடன் நெருங்கி உறவாடினர். அதேபோல மோடி விவகாரத்திலும் நிலைமை மாறலாம்.

குஜராத்துடன் மோடி நின்று விட மாட்டார். தேசிய தலைவராக அவர் நிச்சயம் உருவெடுப்பார்.

அதிமுகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும்...

தமிழக தேர்தலில் பெரும் வெற்றியைப் பெறப் போவது யார் என்றால் அது அதிமுகவாக இருக்கலாம். அதாவது, விஜயகாந்த் வாக்குகளை மட்டுமே பிரிக்கிறார், எனவே அவருக்கு ஓட்டுப் போட வேண்டாம் என மக்கள் நினைத்தால் அப்படி நடக்கலாம்.

விஜயகாந்த்தை மக்கள் இன்னும் பெரிய சக்தியாக கருதவில்லை. சட்டசபையில் அவரது கட்சி வாங்கிய ஓட்டுக்களைத் தாண்டி இந்த முறை அவருக்கு வாக்குகள் கிடைக்காவிட்டால் நிச்சயம் அதிமுகதான் பெரும் வெற்றி பெறும்.

விஜயகாந்த்துக்கு இப்போது வரும் வாக்குகள் எல்லாமே அரசுக்கு எதிரான கருத்துடையவர்களின் வாக்குகள்தான். அரசுக்கு சாதகமான வாக்குகள் திமுகவுக்குப் போகும். தற்போது விஜயகாந்த் பிரிப்பது திமுகவுக்கு எதிரான வாக்குகளைத்தான். அவர் இல்லாவிட்டால், அரசுக்கு எதிரான வாக்குகள் அப்படியே அதிமுகவுக்குத்தான் போகும்.

நாயுடுவும், ஜெயலலிதாவும் காங்கிரஸுக்கு சாதகமாக போவார்களா என்று கேட்டால், ஜெயலலிதா போகலாம். ஆனால் நாயுடு போக மாடடார். அவரது அரசியலே காங்கிரஸை எதிர்த்துதான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே மத்தியில் காங்கிரஸுக்கு அவர் ஆதரவு தந்தால் அவரது அரசியலே அடிபட்டுப் போய் விடும்.

அதேசமயம், திமுக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று காங்கிரஸ் உறுதியளித்தால் உடனே காங்கிரஸுக்கு ஆதரவு தர தயாராகி விடுவார் ஜெயலலிதா.

இலங்கை..

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் தேர்தல் பிரச்சினையாக இருக்காது. மக்கள் அப்படி நினைக்கவில்லை.

ஜெயா டிவியில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்புகளில் கூட அதிமுகவுக்கு ஏன் வாக்களிக்கிறோம் என்பதற்கு மக்கள் கூறிய காரணங்களில் ஒரு காரணம் கூட இலங்கைப் பிரச்சினைக்காக என்று சொல்லவில்லை.

அதேபோல ஜெயலலிதா சொல்வது போல இந்தியா தனி ஈழத்தை அமைத்துக் கொடுக்காது. எந்த அரசும் அது போல செய்யாது. காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, இடதுசாரிகளாக இருந்தாலம் சரி, யாரும் அதை செய்ய மாட்டார்கள். இதுதொடர்பான ஜெயலலிதாவின் கருத்து ஏற்புக்குரியதல்ல.

பின்னர் பாகிஸ்தான் நம்மிடம் வந்து, காஷ்மீரை விடுவித்து விடுங்கள் என்று கேட்கலாம். அல்லது இந்து காஷ்மீர், முஸ்லீம் காஷ்மீர் என பிரித்து விடுங்கள் என்று கேட்கலாம் என்றார் சோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X