காலவரையின்றி ஊட்டி மலை ரயில் ரத்து
மேட்டுப்பாளையம்: ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயிலின் பல் சக்கரம் உடைந்ததை அடுத்து அந்த ரயில் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இயற்கை எழிலை ரசித்தபடியே இந்த ரயிலில் பயணம் செய்வது கண்களுக்கு விருந்தானது. கோடை காலத்தில் இந்த ரயிலில் செல்ல பயணிகள் மத்தியில் கூட்டம் அலைமோதும்.
19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரால் துவக்கப்பட்ட இந்த ரயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. கடந்த 2005ல் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இப்படி பல பெருமைகளை கொண்ட இந்த ரயில் சமீபகாலமாக போதிய பராமரிப்பு இல்லாமல் அடிக்கடி பழுதடைந்து வருகிறது.
இந் நிலையில் நேற்று முன்தினம் மலை ரயிலின் பல்சக்கர தண்டவாளம் ஒன்று உடைந்து, என்ஜினுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரயில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 1 கிமீ., தூரம் வரை சென்றது. பின்னர் ஒரு வழியாக அது நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 300 பயணிகள் உயிர் தப்பினர்.
அவர்கள் பஸ் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து ரயில் என்ஜின் மற்றும் தண்டவாளத்தை சரி செய்யும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. சேலம ரயில்வே மண்டலத்தில் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை மலைரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
