For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் இன அழிப்பில் இலங்கை அரசு தீவிரம்!

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: வட, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை முற்றிலும் விரட்டும் நோக்கிலும், தமிழ் இனத்தையே இந்தப் பகுதிகளிலிருந்து அழிக்கும் நோக்கிலும் இலங்கை அரசு செயல்படத் தொடங்கியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வட கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பலர் காணாமல் போய் வருகின்றனர். கடத்தல்கள், படுகொலைகள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தையும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்கள்தான் செய்து வருகின்றன. அரசின் தூண்டுதலின்பேரிலேயே இவ்வாறு அவை செயல்படுவதாக தெரிகிறது.

அதேசமயம், தெற்கில் உள்ள சிங்களர்களை வடக்கு கிழக்கில் போய் குடியேறுமாறு அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழர்கள் வசித்த பகுதிகளில், இப்போது அவர்கள் விரட்டப்பட்டு விட்ட நிலையில் அங்கு சிங்களர்களை பெருமளவில் குடியமர்த்தும் வேலைளை அரசு செய்து வருகிறது.

லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவுக்கு 50 மைல் தெற்கில் உள்ள திரிகோணமலையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஏராளமான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். ஒன்று அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது கடத்தப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

காணாமல் போன 15 பேரில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒருவர் கூறியுள்ளார். மூன்று பேரின் உடல்களும் ஏராளமான காயங்களுடன் காணப்பட்டன. அவர்களை சித்திரவதைப்படுத்தி கொன்றுள்ளதாக தெரிகிறது. இருவரின் கைகள் கட்டப்பட்டிருந்தன. கைகளைக் கட்டி, நிற்க வைத்து தலையில் சுட்டு அவர்களைக் கொன்றுள்ளனர்.

இவையெல்லாம் தமிழர்களை அச்சுறுத்தி அங்கிருந்து ஓடச் செய்வதே என்று நிவாரணப் பணியாளர் ஒருவர் கூறுகிறார். கிழக்கு மாகாணத்தில் பெருமளவில் தமிழர்கள் விரட்டப்பட்டு வருகின்றனர். அங்கு ஒரு தமிழர் கூட இருக்கக் கூடாது என்ற நோக்கில் சிங்களர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நிலங்களைப் பறிப்பது, அடிப்பது, பெண்களைக் கற்பழிப்பது என மிகக் கொடூரமான செயல்கள் நடந்து வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை பெரும்பான்மையினராக தமிழர்கள்தான் உள்ளனர். ஆனால் விரைவில் அங்கு அவர்கள் சிறுபான்மையினராகக் கூடிய அபாயங்கள் உள்ளன என்கிறார் அவர்.

பல கிராமங்களை உயர் பாதுகாப்பு மண்டலமாக ராணுவம் அறிவித்து விட்டதால் அந்தக் கிராமங்களில் வசித்து வந்த தமிழர்கள் தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பகுதிகளை காலி செய்து விட்டு செல்லும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இந்தப் பகுதிகளில் தற்போது சிங்களர்களை குடியமர்த்தி வருகிறதாம் ராணுவம்.

பல தமிழர்கள் பிரச்சினை எதற்கு என்று வந்த விலைக்கு தங்களது வீடுகளை விற்று விட்டு குடும்பத்தினருடன் இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.

திரிகோணமலை மற்றும் அதைச் சுற்றிலும் வசிக்கும் தமிழர்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். ஒன்று இடத்தைக் காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை என்ற மோசமான பயமுறுத்தலுக்கு மத்தியில் அவர்கள் உள்ளனர்.

புதிதாக ரோடு போடப் போகிறோம், மின் நிலையம் அமைக்கப் போகிறோம், நீர்ப்பாசனத் திட்டம் வரப் போகிறது என்று கூறிக் கொண்டு தமிழர்களின் நிலங்களை அரசு பறித்து வருகிறதாம்.

ஆனால் இப்படிப் பறிக்கப்பட்ட பகுதிகளில் சிங்களர்கள் பெருமளவில் குடியேறி வருகின்றனராம். இது அப்பட்டமான இன அழித்தல் என்று அப்பாவித் தமிழர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

கிழக்கில் இன்று நடந்து வரும் இதே செயல்கள் விரைவில் வடக்குக்கும் பரவும் எனவும் தமிழர்கள் கூறுகின்றனர். வடக்கு மாகாணத்தில் 95 சதவீத கட்டடங்கள் தரை மட்டமாகி விட்டன. அந்த மாகாணமே கிட்டத்தட்ட சுடுகாடு போலக் காணப்படுகிறது.

இதற்கிடையே, வட கிழக்கு தமிழர்களை ஒரே இடத்தி்ல குடியமர்த்தாமல் சிங்களப் பகுதிகளில் ஆங்காங்கு குடியமர்த்தும் விஷமத்தனமான திட்டத்தையும் இலங்கை அரசு வைத்துள்ளதாம்.

அதாவது, தமிழர்களுக்கென்று தனிப்பட்ட எந்த இடத்தையும் தராமல், சிங்களர்களுக்குப் போக மீதமுள்ள இடத்தில் அவர்களை பிரித்து வைத்து விடும் குரூர திட்டமாகும் இது.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழர் பகுதி என்ற ஒன்றே இல்லாமல் செய்து விடலாம் என்பது இலங்கை அரசின் எண்ணம். வடக்கு, கிழக்கு என்றால் தமிழர்கள் பகுதி என்ற பாரம்பரியத்தையும் குலைத்துப் போடும் குரூர புத்தியுடன் இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாம்.

இலங்கை அரசின் இந்த இன அழித்தல் நடவடிக்கையை தமிழ் எம்.பி. சம்பந்தனும் ஒப்புக் கொள்கிறார்.

திரிகோணமலை மாவட்டத்தில் சிங்களர்கள் வசிக்கும் செருபில்லா பகுதியையும், தமிழர்கள் வசிக்கும் பொலனருவா பகுதியையும் இணைக்கும் வகையில் சாலை போட்டு வருகிறார்கள். இந்தப் பகுதியின் இரு மருங்கிலும் தற்போது சிங்களர்கள் பெருமளவில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இது இன அழித்தல் நடவடிக்கையாகும். விரைவில் இந்த நடவடிக்கை வடக்குக்கும் பரவும் என நாங்கள் அஞ்சுகிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X