Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ணுள்ளி பாம்பு

Subscribe to Oneindia Tamil

Snake
- இசக்கி ராஜன்

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்த பாம்பை பல வடநாடுகளில உணவுக்கும், சூப்பாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

பாம்பு இனத்தில் சுமார் 300 வகைகள் இருப்பதாகவும், நம் இந்தியாவில் 200 வகையான பாம்புகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம், கட்டுவீரியன், கொம்பேறி மூக்கன் பல்வேறு பாம்புகளும் உண்டு.

இதே இனத்திலுள்ள ராஜநாகம் வகை பாம்புகளில் விலைமதிக்க முடியாத முத்துகளும் உண்டு. இந்த முத்துகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆங்கங்கே நடைபெற்று வருகின்றன. கொடூர விஷத்தன்மை கொண்ட பாம்புகளை பிடித்து விஷம் எடுத்து மருத்துவத்துக்கு பயன்படுத்துவதும் நாம் அறிந்ததே.

தற்போது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருதலைமணியன் என்று கூறப்படும் மண்ணுள்ளி பாம்புக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த மண்ணுளி பாம்பு மண்புழு வகையை சார்ந்தது. மண்ணுக்குள்ளேயே வாழ்ந்து அதனுள்ளேயே உணவை தேடிக் கொள்வதால் மண் உள்ளேயிருக்கும் பாம்பு என அழைக்கப்பட்டு மண்ணுளி பாம்பு என்ற பேச்சு வழக்கத்திற்கு வந்தது வேறு விசயம்.

இருதலை மணியன் என்றழைக்கப்படும் இந்த மண்ணுளி பாம்புக்கு கடிக்கும் தன்மை கிடையாது. நாக்கினால் நக்கும் தன்மை உண்டு. அப்படி நம் மீது அதன் எச்சில் பட்டால் தோலில் அலர்ஜி ஏற்பட்டு ஆங்கங்கே தடிப்பு, தடிப்பாய் ஏற்பட்டு மாற்றம் ஏற்படும்.

கடந்த ஆண்டுவரை இந்த பாம்பை யாரும் சீண்டியதாக தகவல் இல்லை. ஆனால் சமீபகாலமாக தமிழகமெங்கும் தீவிரவாதிகளை சல்லடைபோட்டு தேடும் போலீசார் போல இந்த பாம்புக்காக தமிழகமெங்கும் புரோக்கர்கள் கும்பல் கும்பலாக தமிழகமெங்கும் கிராமம் கிராமமாக போய் படையெடுத்து மண்ணுளி பாம்பை பிடித்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்ணையும், பொன்னையும் தேடி மக்கள் அலையும் இந்தக் காலத்தில், மண்ணுள்ளி பாம்புக்கு வந்த திடீர் கிராக்கிக்கு என்ன காரணம்...

இந்த வகை பாம்புகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கிடைப்பதுதான் முக்கிய காரணம். இந்த பாம்பை வீட்டில் வளர்த்தால் வாஸ்து-சாஸ்திரப்படி ராசி என்றும், இந்தபாம்பு இருக்கும் வீட்டில் மகாலெட்சுமி கடாட்சம் பெருகும் என்றும் அதற்காகத்தான் தொழிலதிபர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 6 மாதமாக மண்ணுளி பாம்பை கடத்தியவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வனத்துறை பணம், பாம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தது.

இதுகுறித்து விசாரிக்க நாம் களத்தில் குதித்தோம்....இதுபற்றி பெயர் கூறவிரும்பாத சிலர் கூறியதாவது..

இந்த மண்ணுளி பாம்பு வாஸ்து படி ராசியான பாம்புதான். இந்த பாம்பு பரவலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள விளைநிலங்கள், தரிசு நிலங்களிலும், அதிகம் கிடைக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், திசையன்விளை, மாறந்தை, விகேபுரம், பாபநாசம், சுரண்டை, வாசுதேவநல்லூர், குற்றாலம், வள்ளியூர், ராதாபுரம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், தெய்வ செயல்புரம், வல்லநாடு மற்றும் தேரிக்காட்டு பகுதிகளிலும் இந்த பாம்பை பெரிய கும்பல் வேட்டையாடி வருகின்றன.

ஆனால் அப்பாவிகள் சிலர் சில ஆயிரங்களுக்காக பாம்பு வேட்டையில் ஈடுபட்டு வனத்துறையிடம் மாட்டுவது, வாடிக்கையாகி வருகிறது. மேலும் பாம்பு கடத்தல் புரோக்கர்களோடு வனத்துரையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் கூட்டு சேர்ந்து இந்த வேட்டையில் ஈடுபட்டு வசூலில் கள்ளா கட்டி வருகின்றனர்.

மண்ணுளி பாம்புக்கு எடைக்கு தகுந்தாற்போல் பணம் கொடுக்கின்றனர். ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள பாம்புகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கொடுக்கின்றனர்.

ஆனால் இந்த பாம்புகளை மொத்தமாக வாங்கும் சென்னையை சேர்ந்த ஒரு புள்ளிக்கு புரோக்கர்கள் ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரையும் அதற்கும் மேலும் விற்பனை செய்து விடுகின்றனர். இதனை வாங்கும் அந்த சென்னை புள்ளி அதை வேறு ஒருவருக்கு விற்பனை செய்கிறாராம். அந்த பாம்பு கிடந்த மண் சுமார் 10 கிலோ வரை தேவையாம். அப்போதுதான் மாற்று பகுதியில் கொண்டு விட்டாலும் அந்த பாம்பு உயிருடன் எடை குறையாமல் இருக்குமாம்.

சென்னையைச் சேர்ந்த அந்த நபர் ஒரு மருத்துவராம். இந்த பாம்பு மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுவதாகவும், இந்த பாம்பின் உடலில் ஒரு மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு மருந்து தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டாலும், சிலர் ரகசியமாக கூறியது உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ்கும், கேன்சருக்கும்தான் இந்த பாம்பு அதிமகாக பயன்படுகிறாதாம்.

அது எப்படி என்று நாம் ஆர்வத்தோடு கேட்டோம். மண்ணுளி பாம்பின் உடலில் ஏராளமான வெள்ளை அணுக்கள் உண்டு. இந்த வெள்ளை அணுக்கள்தான் மனிதனுக்கு தேவைப்படுகிறதாம். காரணம், வெள்ளை அணுக்கள்தான் நோய் எதிர்ப்பை தரக் கூடியவை. இது குறைந்தால்தான் உடலில் நோய்கள் ஏற்படும்.

எய்ட்ஸ் நோய், கேன்சர் ஆகிய நோய் தாக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை அணுக்கள் செயல்பாடு குறைந்து விடுவதால் மரணத்தை நோக்கி தள்ளப்பட்டு விடுகின்றனர். அவர்களை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியான வெள்ளை அணுக்கள் தேவை.

அந்த வெள்ளை அணுக்கள் மண்ணுளி பாம்புக்கு அதிகம் இருப்பதால்தான் அதனை தேடி பலர் இன்று படையெடுக்க முக்கிய காரணம் என்கிறார்கள்.

எய்ட்ஸ், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் பணத்தை பற்றி கவலைப்படுவது கிடையாது. உயிர் மேல்தான் பயம் இருக்கும். அதற்கு எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்வதால்தான் நேற்று வரை அறுவெறுப்புடன் நாம் ஓதுக்கி தள்ளிய இருதலை மணியன் பாம்புக்கு இன்று கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்றனர்.

மண்ணுளி பாம்பின் உடலிலிருந்து எடுக்கப்படும் வெள்ளை அணுக்கள் மனிதனுக்கு செயல்படுத்துவது சாத்தியமா என்று மருத்துவர்களிடம் விசாரித்தோம்.

அதெல்லாம் கப்சா...

இதுகுறித்து (ஐஎம்ஏ) இந்திய மருத்துவர்கள் சங்க குற்றால கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏசி குமார் கூறுகையில்,

எய்ட்ஸ் மற்றும் கேன்சருக்கு இதுவரை உரிய மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. அதற்கான ஆய்வுகள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மண்ணுளி பாம்பிலிருந்து வெள்ளை அணுக்கள் எடுக்கப்பட்டு எய்ட்ஸ், கேன்சர் தாக்கியவர்களுக்கு செலுத்தப்படுவதாக கூறுவது பொய்யான சேதி.

கொடிய விஷ பாம்புகளிலிருந்து கொடிய விஷ முறிவு மருந்துகள் எடுக்கப்பட்டு அதனை ஆய்வு முலம் பரிசோதித்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மண்ணுளி பாம்பின் வெள்ளை அணுக்கள் ஆய்வு குறித்து இதுவரை உறுதியான செய்தி மருத்துவ துறையில் இருந்து வெளியாகவில்லை.

ஏற்கனவே கடல் ஆமைகளில் ஒரு வகை ஆமைகளை விரும்பி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்று ஒரு வதந்தி பரவியது. அதுபோல் இதுவும் இருக்கிறது.

கருப்பை வழியாக சென்று பெண்களை தாக்கும் தாக்கும்
HBV என்ற வகை புற்றுநோய் அணுக்கள் குறித்தும், ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் என நோய் கண்டறிந்தவர்களுக்கே 2008ம் ஆண்டுதான் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு நோய்க்கும் இதுவரை எந்த முழுமையான மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அப்பாவி மக்களை ஏமாற்றிட மண்ணுளி பாம்பு அணுக்கள் மூலம் இந்த நோய்களை குணப்படுத்திடலாம் என்று வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாந்துவிட கூடாது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+