நாளை தென்மேற்கு பருவமழை துவக்கம்
டெல்லி: தென்மேற்கு பருவமழை நாளை துவங்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி துவங்கும். ஆனால் இந்த ஆண்டு சற்று முன்னதாக கடந்த மே 23ம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதையடுத்து பருவமழை ஒரு வாரம் முன்னதாக துவங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் உருவான அய்லா புயல், தென் மேற்கு பருவ மழையின் வேகத்தை குறைத்தது.
இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அய்லா புயல் ஓய்ந்ததை அடுத்து நாளை முதல் தென்மேற்கு பருவமழை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பல மாநிலங்களிலும் பருவமழை கொட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகள் தென் மேற்கு பருவமழையால் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அரபிய மற்றும் வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த வேறுபாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து வங்க கடலின் வடக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளது. இதனால் நாளை தொடங்கும் மழை 5ம் தேதி வாக்கில் தீவிரமடையும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications