நெய்வேலி ஊழியர்களுக்காக அதிமுக உண்ணாவிரம்-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் சுமார் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்வது, மருத்துவ வசதி செய்து கொடுப்பது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் முன்னிலையில் கடந்த ஆண்டு தொழிற்சங்கத்தினருக்கும், நிர்வாகத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
இந்த உடன்பாடு ஏற்பட்டு சுமார் ஒரு ஆண்டு முடிந்துவிட்ட நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொழிலாளர்களை நிர்வாகத்தினர் இழுத்தடிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் படிப்படியாக நிரந்தரம் செய்வது, ஏற்கெனவே ஒப்புகொண்டபடி 5 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை தொழில் கூட்டுறவு பணி சங்கத்தின் ஊழியர்களாக்குவது, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குடியிருக்க வீடு வழங்குவது, சம வேலைக்கு சம ஊதியம் ஆகியவற்ற நிறைவேற்ற வேண்டும்.
இவற்றை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், வரும் 12.6.2009 வெள்ளிக்கிழமை அன்று நெய்வேலி நகரியத்தில் உள்ள கியூ பாலம் அருகில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரத அறப்போராட்டம், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.சின்னசாமி எம்எல்ஏ, தலைமையிலும், என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் செயலாளர் இராம.உதயகுமார் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த உண்ணாவிரத அறப் போராட்டத்தில், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கட்சி தொண்டர்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளவேண்டும்.
தொழிலாளர்களது நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரத அறப் போராட்டத்தில், என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications