For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா ஒரு உலக மகா அதிசயம்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஒரு திட்டத்தை ஒரு தேர்தல் அறிக்கையில் ஆதரிப்பதும், அடுத்த தேர்தல் அறிக்கையில் எதிர்ப்பதுமாக செயல்படும் ஜெயலலிதா தான் உலக அதிசயங்களிலேயே உச்சகட்ட அதிசயம் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியி்ட்டுள்ள அறிக்கை:

உலக அதிசயங்களில் உச்சக்கட்ட அதிசயத்தைக் காண வேண்டுமானாலும், கேட்க வேண்டுமானாலும் அதிகத் தொலைவு செல்லாமலேயே, அதிக சிரமம் எடுத்துக் கொள்ளாமலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் ரீதியான, சமுதாய ரீதியான அறிக்கைகளையும், அவர் வெளியிட்ட சூளுரைகளையும், அறைகூவல்களையும் திரும்பத் திரும்பப் படித்தாலே ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உலக அதிசயத்தை நாம் காண முடியும்.

குருதி கொப்பளித்திட...

அவர் தலைமை ஏற்றிருக்கும் அதிமுக கட்சியின் சார்பாக அவரே கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கைகள் முக்கியமாக மூன்று உண்டு. 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை எடுத்துப் படித்துப் பார்த்தால், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று உறுதிமிகுந்திட, குருதி கொப்பளித்திட அந்தத் திட்டத்தால் தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகளை எல்லாம் விவரித்து, சேது சமுத்திரத் திட்டம் சிறப்பான திட்டம், சீர்மிகுத் திட்டம், தமிழ்நாட்டை செழிக்க வைக்கும் திட்டம், தரணி போற்றும் திட்டம், எந்தத் தடை வந்தாலும், அதனை எதிர்த்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று தேர்தல் அறிக்கையில் வெளியிட்டவர் இதே ஜெயலலிதாதான்.

அடுத்து, 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அதற்கும் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். வெளியிட்டவர் வேறு யாருமல்ல, இதே ஜெயலலிதா தான். அந்தத் தேர்தல் அறிக்கையிலும் அழுத்தந்திருத்தமாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று சொன்னார்.

மமதை பொங்க கர்ச்சனை...

அதற்கடுத்து, 2009ல் மற்றொரு தேர்தல். நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல். அதற்காகவும் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றிய பேச்சே இல்லை. இல்லாதது மாத்திரமல்ல, அதிமுக அணியின் சார்பாக ஒரு ஆட்சி வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று மண்ணுக்கும், விண்ணுக்குமாக நின்று, மமதை பொங்க கர்ச்சனை செய்தார்.

திட்டத்திற்காக பாடுபடுவோம் என்று ஒரு தேர்தல் அறிக்கை. அதே திட்டத்தை நாங்கள் ஆதரிக்கும் கட்சி மத்தியிலே ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று இன்னொரு தேர்தல் அறிக்கை. இந்த இரண்டையும் படித்துவிட்டு தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைத்தார்களோ, தெரியாது.

அம்மா என்றால் அம்மா தான்...

ஆனால் அவரது அடிவருடிகளாக இருக்கும் ஆழ்வார்களின் கூட்டம் அம்மா என்றால் அம்மா தான். ரூ.2,467 கோடி மதிப்பீட்டிலான சேது சமுத்திர திட்டத்தையே, அறுபது சதவிகிதத்திற்கு மேலான பணி முற்றுப் பெற்றுள்ள நிலையில் அதை ரத்து செய்வோம் என்று கூறிய தைரியத்தை உச்சக்கட்ட அதிசயம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வதென வியந்து நின்றார்கள். மகிழ்ந்து நின்றார்கள். தலை குனிந்து நின்றார்கள்.

அண்மையில் இந்த அம்மையாரின் சொல்லும், செயலும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு - இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இதுவரையில் மெளனமாக இருந்து அங்கே நடந்த கொடுமைகளைப் பார்த்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தாரே. அப்படியே தொடர்ந்து இருந்து தொலைக்காமல், இப்போது நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டல்லவா நீட்டி முழக்குகிறார்?

'போரில் மக்கள் கொல்லப்படுவது சகஜம்'...

இலங்கையிலே நடந்த அப்பாவித் தமிழர்களின் படுகொலையும், சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் உருண்ட தமிழர் தலைகளும், அப்போதெல்லாம் இந்த அம்மையாருக்கு இலங்கைத் தமிழர்களை எதிர்த்து நடத்தும் யுத்தமாக தெரியவில்லை.

அதுபற்றி என்ன சொன்னார்? விடுதலைப்புலிகளை எதிர்த்துத்தான் ராஜபக்சே போர் நடத்துகிறார். ஆனால் தமிழர்களை எதிர்த்து என்று இங்கே உள்ள அரசியல் கட்சிகள் சொல்வதை ஏற்க முடியாது என்றல்லவா ஜெயலலிதா பறை கொட்டினார்.

அப்போது பத்திரிகைகளில் வெளிவந்த அந்த வாசகங்களை அந்த பத்திரிகைகள் எல்லாம் இப்போது மறைக்க முடியுமா? அதுமட்டுமல்ல, ஒரு யுத்தம் நடந்தால், அதிலே அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று ஓங்கியடித்தார்.

கொடை நாட்டு குகைக்குள் ஒளிந்து கொண்டு...

ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பேசியவர். தேர்தல் நெருங்கிவிட்டதும், திரையை விலக்கிக் கொண்டு தெருவுக்கு வந்து, நானும் தமிழ் ஈழம் கேட்கிறேன்' என்று அதற்காக கவசமணிந்து, கட்கம் ஏந்தி, களம் புகுவோம் வாரீர் என்று முரசு கொட்டினாரே. இப்போது எங்கே புகுந்துள்ளார்? கொடை நாட்டு குகைக்குள் ஒளிந்து கொண்டல்லவா எனக்கு சவால் விடுகிறார்.

தமிழ் இனத் தலைவர் என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழக அரசின் முதல்வர் கருணாநிதிக்கு தமிழர்களைப் பற்றி அறவே கவலை கிடையாது.

வனிதாமணி...

இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, அவர்களுக்குச் செய்ய வேண்டிய நிவாரண உதவி ஆகியவற்றை அறிந்து கொள்ளும் அக்கறை கருணாநிதிக்கு இல்லை. இப்படி கொக்கரித்திருக்கிறார், வக்கரித்து அறிக்கை விடுத்துள்ள அந்த வனிதாமணி.

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவி பற்றி எனக்கு அக்கறை இல்லை என்று சொல்கிற ஜெயலலிதாவுக்கும், அவரை இன்னமும் நம்புகிற அதிமுக தோழர்களுக்கும் இதோ நினைவுபடுத்துகிறேன்.

நிவாரண உதவிகளுக்காக தமிழக அரசின் சார்பில் நான் நிதி கேட்டு, தமிழக மக்கள் உதவிய தொகை ரூ.50 கோடிக்கு மேல்.
அந்தத் தொகையில் ரூ. 25 கோடி பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு உடை, உணவு, மருந்து போன்ற பொருள்களை வாங்கி, செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக வழங்கப்பட்டு, அவைகள் முறையாக விநியோகிக்கப்பட்ட செய்தியை மத்திய அரசின் வாயிலாக நாம் அதனைத் தெரிந்து கொண்டிருக்கிறோம்.

பொருள்கள் வாங்கியது போக மீதமிருந்த ரூ.25 கோடியை மத்திய அரசின் மூலமாக இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காகவே அனுப்பி வைப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறோம்.

நமது தொடர் வேண்டுகோள்களின் காரணமாகத்தான் மத்திய அரசு இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்விற்காக இந்திய அரசின் சார்பில் ரூ.500 கோடியை நிதியுதவி அளிக்க முன்வந்து, அதற்காக நாம் நன்றியும் தெரிவித்திருக்கிறோம்.

ஆனால், இங்கேயுள்ள ஜெயலலிதா, கருணாநிதி, இலங்கைத் தமிழர்களைப் பற்றி வாய் திறக்கமாட்டேன் என்கிறார் என்று ஒரு வடிகட்டிய பொய்யை தன்னுடைய அறிக்கையின் வாசகமாக ஆக்கியிருக்கிறார்.

பிரபாகரனை கைது செய்ய சொன்னவர்...

பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும், அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிந்தவரே இதே ஜெயலலிதா தான்.

அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தமிழக அரசின் சார்பில் இலங்கைப் பிரச்சினைக்காக சென்னை தலைமைச் செயலகத்திலே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திய போதும், மகத்தான மனித சங்கிலி ஒன்றை நடத்தியபோதும், டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த போதும்.

அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இலங்கைத் தமிழர்களுக்காக அக்கறை கொண்டவர் போல் செயல்பட்டதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால், இதில் உலக அதிசயம் என்னவென்றால், அவரே நம்ப முடியாத ஒரு பொய்யை அவரே எழுதி, அவரே அறிக்கையாக வெளியிட்டிருப்பதுதான். அதைவிட உலக அதிசயம் என்னவென்றால் அதை இங்குள்ள சிலர் நம்பி இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஜெயலலிதாவுக்குத்தான் அக்கறை என்று கூறுவார்களேயானால், அதுதான் உலக அதிசயம் மட்டுமல்ல, உலக மகா அதிசயமும் ஆகும் என அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X