For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லோரையும் ஒன்றாக்கிய திராவிட இயக்கம்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: ஆண்டவன் படைப்பில் எல்லோரும் ஒன்றுதான் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துகின்ற துணிவும், நெஞ்சுறுதியும் திராவிட இயக்கத்தினுடைய தோற்றத்தால் தான் ஏற்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தமிழக சட்டசபை துணை சபாநாயகர் வி.பி. துரைசாமியின் மகன் திருமணம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிலையில், நேற்றைய தினம் துரைசாமி என்னைச் சந்தித்து, ““நீங்கள் ஒன்பது மணிக்கே வந்து திருமண விழாவைத் தொடங்கி வைத்து விட்டுச்சென்றால் போதும், அதற்குப் பிறகு நீங்கள் மேடையிலே இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சட்டமன்றத்திற்குச் செல்லலாம்" என்று உறுதியளித்து இன்றைக்கு இந்த மணவிழாவிலே கலந்து கொள்கின்ற வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார்.

இங்கே மணமக்கள் வீற்றிருக்கின்ற அழகான காட்சியை நான் காண்கின்றேன். அவர்கள் எதிர்கால நல்வாழ்விற்கு எந்த வகையிலும் உரியவர்கள்; தகுதியானவர்கள் என்ற அளவுக்கு படித்த பெருமக்களாக இன்றைக்குத் திகழ்கின்றார்கள்.

ஒரு காலத்தில் இப்படிப்பட்ட அருந்ததியர் சமூகங்களில் படித்தவர்களை பொறுக்கி எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.

ஆனால் என்றைக்கு தமிழகத்திலே தந்தை பெரியாருடைய கருத்துக்கள், அண்ணாவினுடைய லட்சியங்கள், திராவிட இயக்கத்தினுடைய எண்ணங்கள் பரவத் தொடங்கியதோ அந்நாள் முதல் இந்நாள் வரையில்,

யாரை தாழ்த்தப்பட்டவர்கள்; யாரை நெருங்கத்தகாதவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்றெல்லாம் பழித்தும் கேலி செய்தும் அரசியலுக்கு வரவொட்டாமல் கொடுமை புரிந்தும் எந்தச் சமுதாயம் அலைக்கழிக்கப்பட்டதோ,

அந்தச் சமுதாயம் விழிப்புறவும், “நாங்களும் மனிதர்கள்தான்; ஆண்டவன் படைப்பில் எல்லோரும் ஒன்றுதான்" என்ற அந்த உண்மையை உலகுக்கு உணர்த்துகின்ற துணிவும், நெஞ்சுறுதியும் திராவிட இயக்கத்தினுடைய தோற்றத்தால் ஏற்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நம்முடைய கண்ணப்பன் பேசும்போது, அருந்ததியர் சமுதாயத்திற்கும், கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கும் பாலமாக நம்முடைய துரைசாமி விளங்குகிறார் என்று குறிப்பிட்டார். பாலமாக விளங்கினாலும் சரி; பலமாக விளங்கினாலும் சரி இதை திராவிட இயக்கத்தினுடைய பரிசு என்றுதான்- திராவிட இயக்கம் தந்த வெகுமதி என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இங்கே இரு சமுதாயத்தினுடைய பெயர்களைக் குறிப்பிட்டபோது கையொலி எழுந்தது. யாருடைய கையொலி அது என்று எனக்குத் தெரியாது. அது கொங்கு வேளாளர் சமுதாயத்தின் கையொலியா அல்லது அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கையொலியா என்று தெரியாது.

யார் கையைத் தட்டினாலும் ஒரே ஒலிதான் எழும்பும். கை தட்டினாலே இது அருந்ததியர் சமுதாயத்தின் கையொலி; இது கொங்கு சமுதாயத்தின் கையொலி என்று தரம் பிரிக்க முடியாது.

என்னைப் பொறுத்த வரையில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு என்ற ஒரு நிலையை அறிவித்து அதைச் சட்டமாகவும் ஆக்கிய பெருமை திமுகஆட்சிக்கு உண்டு.

இது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. அவர்கள் யார்? அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான். நம்முடைய உடலிலே ஓடுகின்ற ரத்தம் தான் அவர்களுடைய உடலிலும் ஓடுகிறது என்ற அந்த உணர்வோடு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் இவர்கள் எல்லாம் எடுத்து இயம்பிய அந்தக் கருத்துக்களின் அடிப்படையிலேதான் திராவிட இயக்கம் இயங்குகிறது.

இன்னும் சொல்லப்போனால் என்னோடு இந்த மேடைக்கு வந்திருக்கின்ற, என்னுடைய வீட்டிலே என்னிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்ற உதவியாளர்களில் ஒருவர்- நித்யா என்கின்ற வாலிபர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் என்பதை சொல்லும்போது நான் பெருமை அடைகின்றேன்.

ஒரு காலத்திலே, “நான் இந்த ஐயருக்குச் சொந்தக்காரன். இந்த ஐயங்காருக்கு வேண்டியவன்" என்பது பெருமையாக இருந்திருக்கலாம். இன்றைக்கு நான் பெருமையாகக் கருதுவது, இந்த அருந்ததியர் வீட்டுப் பையன் எனக்கு சினேகிதன் என்று சொல்வது எனக்குப் பெருமையாக இருக்கிறது என்றால் அது பெரியார் வளர்த்த, அண்ணா வளர்த்த, திராவிட இயக்கம் வளர்த்த உணர்வு என்பதைச் சொல்லி,

அந்த உணர்விலே கொஞ்சமும் குறையாமல், அந்த உணர்வை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு வருபவர், அந்த உணர்வால் எல்லோரையும் ஒன்று சேர்ப்பவர் என்னுடைய தம்பி துரைசாமி என்கிறபோது நான் பெருமை அடைகின்றேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X