டெல்லி அருகே 2 ரயில்கள் மோதல்-7 பேர் காயம்
டெல்லி: டெல்லி அருகே சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதிக் கொண்டதில் 7 பயணிகள் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் அம்பாலா சஹரன்பூரில் இருந்து டெல்லி நிஜாமுதீன் நோக்கி நேற்று இரவு பயணிகள் ரயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் ரயில் நிலையம் அருகே வந்த போது அதே தண்டவாளத்தில் பெட்ரோல் டேங்கர்கள் ஏற்றிய சரக்கு ரெயில் சிக்னலுக்காக நின்றிருந்தது.
அதே தண்டவாளத்தில் சென்ற பயணிகள் ரயில் சரக்கு ரெயிலின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு ரயிலின் கடைசி பெட்டியில் இருந்த கார்டு படுகாயம் அடைந்தார். என்ஜின் டிரைவர் உள்பட 7 பயணிகளும் காயம் அடைந்தனர்.
உடனே காசியாபாத்தில் இருந்து மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள சர்வோதயா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பயணிகள் ரெயில் மெதுவாக சென்றதால் பெரிய அளவில் சேதம் இல்லை.
விபத்து காரணமாக டெல்லி-காசியாபாத் மார்க்கத்தில் ரயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வழியாக செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. முக்கிய ரெயில்கள் மட்டும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.