இந்தியாவின் முதல் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் - தொடங்கி வைத்தார் பிரதமர்

விசாகப்பட்டனத்தில் இன்று நடந்த இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில், பிரதமரின் துணைவியார் குர்சரண் கெளர் நீர்மூழ்கியைத் தொடங்கி வைத்தார்.
பல்வேறு கடல் பரிசோதனைகளுக்குப் பின்னர் இந்த நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் இணைக்கப்படும்.
இதேபோல மூன்று கப்பல்களை இந்தியா வடிவமைத்து வருகிறது. அதில் முதல் கப்பல்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின்போது, தேங்காய் உடைத்து, பூஜைகள் செய்தார் குர்சரண் கெளர். பின்னர் இந்தக் கப்பலுக்கு ஐஎன்எஸ் அரிஹாந்த் என பெயரிடுகிறேன், வாழ்த்துக்கள் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், இது நாட்டின் பாதுகாப்புத்துறையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருண். நாம் யாருக்கும் மிரட்டல் விடுக்கவில்லை. யாருடனும் மோதல் போக்கில் ஈடுபடுபவர்களும் இல்லை என்றார்.
அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பல் 112 மீட்டர் நீளமுடையது. 6000 டன் எடையுடன் கூடியது. 2 ஆண்டுளுக்கு இது கடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னர் இது கடற்படையில் சேர்க்கப்படும்.
கார்கில் தினத்தையொட்டி இன்று ஐஎன்எஸ் அரிஹாந்த் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா உருவாக்கி தொடங்கியிருப்பதன் மூலம், இத்தகைய கப்பல்களை வைத்துள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
அரிஹாந்த் கப்பல், விசாகப்பட்டனம் கடற்படை தளத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்திய கடற்படையும், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்து இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வாகனங்கள் தயாரிப்புப் பிரிவை நடத்தி வருகின்றன.
அரிஹாந்த் நீர்மூழ்கியில் இடம் பெறும் அணு உலை, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷியாவின் அகுலா-1 ரக நீர்மூழ்கியைப் போன்றது அரிஹாந்த் நீர்மூழ்கி என்பது குறிப்பிடத்தக்கது.
அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கியைத் தொடங்கியிருப்பதன் மூலம் வான், நிலம் மற்றும் கடல் மார்க்கமாக அணு ஆயுதங்களைக் கையாளக் கூடிய வல்லமையை இந்தியா பெற்றுள்ளது என்பது முக்கியமானது.












Click it and Unblock the Notifications