இலங்கைக்கு ஐஎம்எப் கடன்-வாக்களிக்காத யு.எஸ், பிரான்ஸ், பிரிட்டன்
கொழும்பு: இலங்கைக்கு 2.6 பில்லியன் டாலர் கடன் உதவியை வழங்குவது தொடர்பான வாக்கெடுப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.
இலங்கைக்கு 2.6 பில்லியன் டாலர் கடனுதவியை அளிக்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கடன் உதவிக்கு ஆரம்பத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இந்த விவகாரம் இழுபறியாக இருந்து வந்தது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றின் நெருக்குதல் மற்றும் இலங்கையில் இந்த நாடுகளின் அதிகரிக்கும் ஆதிக்கம் ஆகியவற்றைப் பார்த்த அமெரிக்கா, எங்கே தான் ஓரம் கட்டப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் தனது எதிர்ப்பைக் கைவிட்டது.
இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு சர்வதேச நிதியம், இலங்கைக்கு 2.6 பில்லியன் டாலர் கடனுதவியை வழங்க ஒப்புதல் அளித்தது.
ஆனால், இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.
இருப்பினும் இதனால் கடனுதவிக்கு ஒப்புதல் வழங்கத் தேவையான வாக்குகள் கிடைப்பதில் சிரமம் இருக்கவில்லை.
ஆனால், மேற்கத்திய நாடுகள் பெரும்பாலானவை இலங்கைக்கு எதிரான கருத்தைக் கொண்டுள்ளன என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. இது இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இலங்கைக்குப் பிரச்சினையாக உருவெடுக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளைப் போல உள்ள கொட்டடிளில் 3 லட்சம் தமிழர்களை முடக்கி வைத்திருக்கும் இலங்கை அரசின் செயலை இந்த நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், மனித உரிமைகளை தொடர்ந்து இலங்கை அரசு மீறி வருவதாகவும் இந்த நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
மேலும், போரின்போது வன்னிப் பகுதியில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு எந்தவித விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதையும் இந்த நாடுகள் கண்டித்து வருகின்றன.
போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இந்த நாடுகள் கோரி வருகின்றன.
போரின் இறுதி நாட்களில் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். புல்டோசர்களை ஏற்றி காயமடைந்தவர்களையும் கொன்று குவித்தது இலங்கைப் படை என்ற பெரும் குற்றச்சாட்டும் உள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களையெல்லாம் இலங்கை அரசு புறம் தள்ளி விட்டது. மேலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதன் கோரிக்கையையும் அது ஏற்கவில்லை. இடம் பெயர்ந்த தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு ஐ.நா. உள்ளிட்ட எந்த மனித உரிமை அமைப்புகளையும் அனுமதிக்க முடியாது எனவும் வீம்பு பிடித்து வருகிறது.
எனவே இலங்கை அரசுக்கு கடன் உதவி அளிக்கக் கூடாது என்று பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் தற்போது அதை தாண்டி கடன் தொகைக்கான அனுமதியைப் பெற்று விட்டது இலங்கை.












Click it and Unblock the Notifications