நெரிசலில் திணறும் மதுரை பாஸ்போர்ட் அலுவலகம்
மதுரை: மதுரையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் போதிய இட வசதி இல்லாததால் கூட்ட நெரிசலால் திணறி வருகிறது.
மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்டது. ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் தற்போது பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கி வருகிறது.
மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இங்குதான் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இங்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் வருகின்னர். ஆனால் போதிய இட வசதி இல்லாததால் நீண்ட கியூ வரிசையி்ல காத்திருக்க வேண்டியுள்ளது.
அனைவருக்கும் உட்கார இடம் கிடையாது. காரணம் அலுவலகம் சிறியதாக இருப்பதால். இதனால் அதிகாரிகளுக்கும் கூட சிரமமாகவே உள்ளது.
இதுகுறித்து பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ஜோஸ் மாத்யூ கூறுகையில், மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தமிழக அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி கிடையாது. மேலும், மத்திய அரசு அலுவலகமாக இருப்பதால் இங்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கும் வழியில்லை.
இதனால் வெளியூர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டி உள்ளது. இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளோம்.
தமிழக அரசு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு என நிலம் ஒதுக்கி தந்தால் புதிய அலுவலகம் கட்டப்படும் என்றார்.
நீண்ட காலமாக கோரப்பட்டு வந்த பாஸ்போர்ட் அலுவலகம் கிடைத்தும், இட நெரிசல் காரணமாக மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தவிக்க வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இடம் கொடுத்தால் புதிய விஸ்தாரமான கட்டடம் கட்டப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications