மின்னணு எந்திர 'தில்லுமுல்லு': நிரூபி்க்க தவறிய அதிமுக-பாமக!
டெல்லி: வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று கூறிய எந்த அரசியல் கட்சியும் அதை நிரூபிக்க முன்வரவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தோற்ற அதிமுக, பாமக, பாஜக ஆகியவை வாககுப் பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதாகவும் அதில் முறைகேடு செய்யப்படுவதாகவும் புகார் கூறின. மேலும் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் வாக்குப் பதிவு எந்திரங்களை பயன்படுத்துவதை எதிர்த்து வழக்குகளும் தொடர்ந்தன.
இதையடுத்து வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வருமாறு இந்தக் கட்சிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம் கடிதங்கள் அனுப்பியது.
ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை இதற்கான டெமாவை செய்து காட்ட டெல்லி வருமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களோ அதன் பிரதிநிதிகளோ டெல்லிக்குச் செல்லவில்லை.
இந் நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்பதை மீ்ண்டும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். ஆனால், முறைகேடு செய்யலாம் என்று கூறிய கட்சிகள், வழக்குப் போட்ட கட்சிகளிடம் அதை நேரில் வந்து நிரூபிக்குமாறு கூறியிருந்தோம்.
இதற்காக ஆகஸ்ட் 3முதல் 8ம் தேதி வரை நேரமும் ஒதுக்கியிருந்தோம். ஆனால், எந்தக் கட்சியும் முறைகேட்டை நிரூபிக்க முன்வரவில்லை.
இவர்களது புகார்களையடுத்து 10 மாநிலங்களில் இருந்து 100 மின்னணு எந்திரங்களை டெல்லிக்குக் கொண்டு வந்து நிபுணர்களைக் கொண்டு சோதனையும் நடத்தினோம். அதிலும் முறைகேடு செய்ய முடியாது என்பது நிரூபணமானது. அதில் எந்தக் கோளாறும் இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.
இதனால் இந்தக் குற்றச்சாட்டே அர்த்தமற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications