ஸ்வைன்: மேலும் 14 பேர் பலி-மொத்தம் 172 பேர் சாவு
டெல்லி: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்றும் மட்டும் மகாராஷ்டிராவில் 6, கர்நாடகாவில் 4, ஆந்திராவில் 3 மற்றும் உத்தரபிரதேசத்தில் 1 என மொத்தம் 14 பேர் பலியாகி இருக்கின்றனர். இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் இறந்தவரின் பெயர் அஜய் அகர்வால் (34). லக்னோவுக்கு அருகில் வசிக்கும் அவர் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டு சுமார் 12 நாட்களுக்கு பின்னர் கடந்த 5ம் தேதி தான் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அந்த நோயாளி தாமதமாக வந்ததால் தான் காப்பாற்ற முடியவில்லை. நோய் வந்து 5 நாட்களுக்கு பின் வந்தால் காப்பாற்றுவது கடினம் என ராம் மனோகர் லோகிய மருத்துவமனையின் சூப்ரிடென்ட் ஏகே சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இறந்த நான்கு பேரும் பெண்கள். அவர்களில் மூவர் பெங்களூரை சேர்ந்தவர்கள், ஒருவர் கோலார் பகுதியில் வசித்தவர்.
அவர்கள் சில நாட்களுக்கு முன் இறந்துவிட்ட போதிலும், அவர்களது பரிசோதனை முடிவுகள் நேற்று தான் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை கர்நாடகாவில் 57 ஆக அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்தில் மூவர் பலி...
ஆந்திராவில் ஹைதராபாத்தில் மூவர் இறந்துள்ளனர். அங்கு காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜா பாபு என்ற 42 வயது நபர் நேற்று முன்தினம் இரவும், ஸ்ரீகாந்த் என்ற 25 வயது வாலிபர் நேற்று காலையும் உயிரிழந்தனர்.
அதே போல் அவேர் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சுனில் குமார் என்ற 38 வயது நபரும் இறந்தார். இதையடுத்து ஆந்திராவில் பலி எண்ணிக்கை 8 ஆகவும், இந்தியாவில் 172 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்தியாவுக்கு 5வது இடம்...
இதையடுத்து உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா, ஆஸ்திரேலியாவை முந்தி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த வரிசையில் முதலிடத்தில் பிரேசில் இருக்கிறது. இங்கு இதுவரை 848 பேர் பலியாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் 631, அர்ஜென்டினா 514, மெக்சிகோவில் 211 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 183 பேருக்கு...
இந்நிலையில் நேற்று மட்டும் இந்தியாவில் 183 பேருக்கு இந்த காய்ச்சல் பலியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 56 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிரா 42, கர்நாடகா 28, தமிழகம் 24, ஆந்திரா 11, கேரளா 7, ஹரியானா 5, உத்தர்கண்ட் 4, சட்டீஸ்கரில் ஒருவருக்கு இந்த காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications