For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் சமரசத்தைத் தொடர்ந்து கணவருடன் இணைந்தார் நாகர்கோவில் கோபிகா

By Staff
Google Oneindia Tamil News

Gopika and Vijayakanth
நாகர்கோவில்: தனது கைக்குழந்தையுடன் கடந்த பல நாட்களாக பல்வேறு வகையிலான போராட்டங்களில் ஈடுபட்டுத் தவித்து வந்த நாகர்கோவில் பெண் கோபிகா, போலீஸ் தலையீட்டைத் தொடர்ந்து தனது கணவர் கண்ணனுடன் இணைந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கண்டன்விளை வடக்கு சித்தன்தோப்பைச் சேர்ந்தவர் கோபிகா (26). எம்.சி.ஏ. படித்துள்ளார்.

இவருக்கும், கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் நடுப்பிடாகையைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 11-9-2008 அன்று திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 3-வது மாதம் கோபிகா, தாயார் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் அதன்பிறகு அவரை அவருடைய கணவர் அழைத்துச் செல்லவில்லை.

இதனால் கடந்த 21-12-2008 அன்று கோபிகா தானே வலிய, கணவர் வீட்டுக்கு சென்றதாகவும், அப்போது கணவர் குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோபிகா, கணவர் வீட்டின் முன்பு 3 நாட்களாக போராட்டம் நடத்தினார். ஆனால் பலன் இல்லை.

இந்த நிலையில் கடந்த 3-6-2009 அன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அடுத்த மாதத்திலேயே எஸ்.பி. அலுவலகத்திற்கு பச்சைக் குழந்தையுடன் வந்து கணவருடன் சேர்த்து வைக்குமாறு அவர் புகார் கொடுத்தார்.

ஆனாலும் போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து கடந்த மாதம் 7ம் தேதி தொடர் போராட்டத்தில் குதித்தார் கோபிகா. இதையடுத்து போலீஸார் அவரிடம் சமரசம் பேசினர். ஆனாலும் பயன் இல்லை.

கோபிகாவின் கணவர் கண்ணன் பிடிவாதமாக மனைவியை அழைத்துச் செல்ல மறுத்து விட்டதால் போலீஸாரும் முயற்சிகளை விட்டு விட்டனர். இந்த நிலையில் கண்ணன் - கோபிகா விவகாரத்தில் அரசியல் புகுந்தது.

கோபிகாவுக்கு ஆதரவாக தேமுதிக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை குதித்தன. மேலும், மதுரை வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கோபிகா சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

மேலும், சென்னை சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து முறையிடப் போவதாகவும் கோபிகா அறிவித்தார்.

இதையடுத்து போலீஸ் தரப்பில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. நேற்று முன்தினம் எஸ்.பி. சண்முகவேல் அலுவலகத்தில் கோபிகா மற்றும் அவருடைய கணவர் கண்ணன் ஆகியோரிடம் சண்முகவேல் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கணவன்-மனைவி இருவரையும் மனம்விட்டு பேச வைத்தார். 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

இதன்பலனாக தீர்வு ஏற்பட்டது. கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ்வதாக முடிவு செய்தனர். இதனால் ஓராண்டு காலமாக போராடிவந்த கோபிகாவின் முயற்சிக்கு பலன் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் உதவியுடன் அவர்கள் திண்டுக்கலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டுக்கல்லில் கண்ணனுக்கு தொழில்நிறுவனம் உள்ளது. இதனால் அங்கு செல்வதாக போலீசில் அவர்கள் கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X