'ஆடு நனஞ்சுச்சாம்.. ஓநாய் அழுதுச்சாம்!'
சென்னை: ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதது என்ற பழமொழிக்கேற்ப ஜெயலலிதாவின் பசப்பு வார்த்தைகளை நம்பி கரும்பு விவசாயிகளும், மக்களும் ஏமாற மாட்டார்கள் என்று வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ...
அதிமுக ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைந்தபோது 9.11.2001ம் நாள் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலை மட்டும் தரப்படும். மாநில அரசின் பரிந்துரை விலையை வழங்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு தெரிவித்தவர்தான் ஜெயலலிதா.
அதிமுக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி 200102 முதல் 200405 வரை 4 ஆண்டு காலம் மத்திய அரசின் சட்டப் பூர்வ குறைந்தபட்ச விலையான ரூ.795 மட்டும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிய ஜெயலலிதா இன்று டன் ஒன்றுக்கு ரூ.2000 வழங்க வேண்டும் என்று அறிக்கைவிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
200910ம் ஆண்டிற்கு 9.5 சதம் கட்டுமானத்திற்கு 1 டன் கரும்பிற்கு மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்த பட்ச விலை ரூ.1,077.60, மாநில அரசின் பரிந்துரை விலை கட்டுமானத்தின் அடிப்படையில் சேர்த்து ரூ.1550 என நிர்ணயம் செய்து இந்த விலையை கூட்டுறவு, பொது துறை ஆலைகள் மட்டுமல்ல, தனியார் சர்க்கரை ஆலைகளும் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
9.5 சத கட்டுமானத்தை விட கூடுதலாக இருக்குமானால் அதிகமான விலை வழங்கப்படும்.விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தது முதல் பல்வேறு சலுகைகளை அளித்து வரும் முதலமைச்சர் கருணாநிதி விவசாயிகளின் பாதுகாவலர், விவசாயிகள் பாதிக்கப்படாமல் அவர்களை காப்பாற்றக்கூடியவர்.
விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகிற போதெல்லாம் உடனடியாக நிவாரணம் வழங்கி விவசாயிகளை மகிழ்ச்சியில் வைத்துக் கொண்டிருப்பவர்.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதது என்ற பழமொழிக்கேற்ப ஜெயலலிதாவின் பசப்பு வார்த்தைகளை நம்பி விவசாயிகளும், மக்களும் ஏமாற மாட்டார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆறுமுகம்.












Click it and Unblock the Notifications