கூடங்குளம் கடல் பகுதியில் மர்ம கப்பல்
கூடன்குளம்: கூடங்குளம் அணு நிலையத்துக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் நேற்று மர்ம கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்யாவின் உதவியோடு அணு நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இங்கு ரஷ்யா நாட்டு விஞ்ஞானிகள் முகாமிட்டு அணு உலை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ள கடல் பகுதியில் இருந்து சுமார் 2.5 கடல் மைல் தொலைவில் ஒரு கப்பல் நேற்று முதல் நின்று கொண்டுள்ளது.
இதை பார்த்த மீனவர்கள், அது இலங்கை ராணுவ கப்பல் என அச்சமடைந்து கரையில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து உளவுத்துறையினர் விரைந்து சென்று கப்பலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த கப்பல் சிங்கப்பூரை சேர்ந்தது என்றும், சுனாமி பயம் மற்றும் மோசமான வானிலை காரணமாக இப்பகுதியில் நிறுத்தி வைத்திருப்பதாகவும் அக்கப்பலின் இந்தோனேசியா கேப்டன் தெரிவித்துள்ளார். அக்கப்பலில் சரக்குகளும் இருப்பதால் அவர் சொல்வது உண்மையாக இருக்கலாம் என தெரிகிறது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications