சீன தேசிய விழா-நாணயம் வெளியிட்ட பாக்.
பீஜிங்: சீனாவுடன் தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக சீனாவின் 60வது ஆண்டு தேசிய தின விழாவினை முன்னி்ட்டு ரூ. 10 மதிப்புள்ள நாணயத்தை பாகிஸ்தான் வெளியி்ட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அதிக அளவில் நிதி உதவிகள் அளித்து வந்தாலும், சீனா தான் தங்களது உற்ற நண்பன் என்பதை பாகிஸ்தான் மீண்டும் உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தான் விமான படையின் எதிர்கால போர் விமானமாக கருதப்படும் ஜேஎப்-17 விமான தயாரிப்பை அந்நாடு சமீபத்தில் தான் சீனாவின் உதவியுடன் துவக்கியுள்ளது.
இந்த சூழலில் தான் பாகிஸ்தான், சீன தேசிய விழாவுக்காக நாணயம் வெளியி்ட்டுள்ளது. 27.5 மிமி விட்டமும், 8.25 கிராம் எடையும் கொண்ட இந்த நாணயத்தை ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் வெளியி்ட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் அறிவியல், தொழில்நுட்ப துறை அமைச்சர் முகமது அசம் கான் ஸ்வாட்டி, இஸ்லாமாபாத்தில் கூறுகையில்,
இந்த நாணயத்தை வெளியிட்டு சீனாவின் 60வது ஆண்டு விழாவை நாங்களும் கொண்டாடுகிறோம். அவர்களுக்கு எனது மனப்பூர்வமாக மரியாதை செலுத்துகிறேன் என்றார்.
பாகிஸ்தானுக்கான சீன தூதர் லுவோ ஜவுகி கூறுகையில், சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான 60 ஆண்டு உறவு தொடரும். அது இன்னும் 600 ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கும். இரு நாடுகளின் கூட்டுறவால் அடுத்து வரும் தலைமுறையினருக்கு பயன் கிடைக்கும் என்றார்.
இதற்கிடையே, இந்தியாவை சமாளிக்கும் நோக்கத்தில் தான் பாகிஸ்தான் தற்போது சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சரும் பாகிஸ்தான் சீன கழகத்தின் தலைவருமான மகமூத் ஹூசைன்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஒவ்வொரு பிரச்சனையின் போதும், சிக்கலின் போதும் சீனா தான் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. சீனா தான் பாகிஸ்தானால் அனைத்து சூழ்நிலைகளிலும் விரும்பப்படும் நண்பன்.
இரு நாடுகளும் அரசியல், சமூகம், கல்வி, மீடியா, வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் இணைந்து செயல்படும் என்றார்.