For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெய்ராம் என் கடிதத்திற்கு பதில் கூட அனுப்பவில்லை- கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: கேரளாவின் புதிய அணைக்கான ஆய்வு தொடர்பாக தவறான உண்மைகளின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி அளித்துள்ளார். மேலும் நான் அனுப்பிய கடிதத்தை அவர் சற்றும் மதிக்கவில்லை, பதில் கூட அளிக்கவில்லை என்று பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில், ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், முழுக்க முழுக்க தவறான தகவல்களின் அடிப்படையில் தவறான உண்மைகளின் அடிப்படையில் வழங்கியுள்ளார்.

எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என ஜெய்ராம் ரமேஷுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.

கேரளாவுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான பிரச்சினையாக இது இருப்பதாலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும், ஆய்வுக்கு அனுமதி வழங்குவதாக இருந்தால், அதுதொடர்பாக தமிழகத்துடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கோரி ஜெய்ராம் ரமேஷுக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தேன்.

ஆனால் எனது கடிதத்திற்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலே அனுப்பவில்லை. அத்தோடு நில்லாமல், கேரள அரசு ஆய்வு நடத்த அனுமதியும் வழங்கியுள்ளார். தமிழக அரசுடனும் அவர் கலந்தாலோசிக்கவில்லை.

மேலும், தேசிய வன விலங்குகள் வாரிய நிலைக்குழுக் கூட்ட விவரங்கள் குறித்த அறிக்கை அதிர்ச்சி தருவதாக உள்ளது. அதில், 113 ஆண்டு கால முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக உள்ளது. அணை உடைந்து எதிர்காலத்தில் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால், புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளிக்கும் முடிவுக்கு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இது மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் 2000மாவது ஆண்டு ஜூன் மாதம் நியமித்த நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையின் முடிவுக்கு முரணாக உள்ளது.

அணை மிகவும் பாதுகாப்பாகவும், ஆபத்தின்றியும் இருப்பதாக நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும், அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆராயும் அதிகாரம், தேசிய வனவிலங்குள் வாரிய நிலைக்குழுவுக்கு இல்லை.

மேலும், இந்த விவகாரத்தை நிலைக் குழுவில் வைத்து விவாதிப்பது நீதிமன்ற விவகாரத்தில் தலையிடுவது ஆகாது என்று கூறியிருப்பது அப்பட்டமான தவறான தகவல் ஆகும் என்று கூறியிருந்தார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X