பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு-15 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சர்வதேச பல்கலைக்கழகத்தில் இரு மனித வெடிகுண்டுகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப்கான் எல்லையில் தலிபான்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இஸ்லாமாபாத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தி்ன் ஆண், பெண் கேம்பஸ்களில் இரு மனித வெடிகுண்டுகள் தனித்தனியே இந்தத் தாக்குதலை நடத்தினர்.
இதில், 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தலிபான்களுடன் சேர்ந்து பழங்குடியினர் தாக்குதல்:
இந் நிலையில் தெற்கு வசீர்ஸ்தான் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தி் மீது தலிபான்களும் அப் பகுதி பழங்குடியினரும் சேர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பழங்குடியினருக்கு ராணுவ தளபதி கோரிக்கை:
இந் நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி கூறுகையில்,
தாலிபன்களுக்கு ஆதரவு தர வேண்டாம். தாலிபன் பயங்கரவாதிகளை ஒடுக்க ராணுவம் எடுத்துள்ள முயற்சிக்கு உதவுங்கள். பயங்கரவாதிகளின் கோரப் பிடியில் இருந்து மக்களை மீட்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தீவிரவாதிகளை ஒடுக்க ஈரான் கோரிக்கை:
இந் நிலையில் ஈரான் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி 42 பேரைக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய சன்னி தீவிரவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை ஈரான் அதிபர் மகமூத் அகமதிநிஜாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரானின் சிஸ்டான் நகரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் உள்ளிட்ட 42 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஈரான் கொதிப்படைந்துள்ளது. இதையடுத்து பதட்டத்தைத் தணிக்கும் வகையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அகமதிநிஜாத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அகமதிநிஜாத் கூறுகையில், ஈரான், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சகோதரரர்கள். தோழமை நாடுகள். ஆனால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள், ஈரானில் கலகம் விளைவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
குற்றம் இழைத்த தீவிரவாதிகளை உடனடியாக பிடிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரு தரப்பும் இணைந்து தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார்.
அதற்குப் பதிலளித்த சர்தாரி, தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள், தீவிரவாதத்தை ஒடுக்க ஈரான், பாகிஸ்தானுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.
ஈரானில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் ஜுன்டல்லா என்பதாகும். இந்த அமைப்புக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகியவை நிதியுதவி செய்வதாக ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த அமைப்பினர்.
சிஸ்டானில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் திட்டம் பாகிஸ்தானில் தீட்டப்பட்டதாக அகமதிநிஜாத் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் தென் மேற்கு பலுசிஸ்தானில்தான் ஜுன்டல்லா அமைப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications