புலிகள் ஊடுருவல்: மாவோயிஸ்டுகளுக்கு ஆயுத பயிற்சி- உளவுப் பிரிவு தகவல்

இதை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள ஒரு செய்தி...
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்டுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுதம், பணம் கிடைப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில், மாவோயிஸ்டுகளுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவும், பயிற்சியும் கிடைத்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் அடர்ந்த வனப் பகுதிக்குள் புலிகள் அமைப்பினர், மாவோயிஸ்டுகளுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்திய கடல் பகுதி வழியாக விடுதலைப் புலிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவலாம். எனவே கவனமாக இருக்குமாறு ஆந்திரா, தமிழ்நாடு, சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களை ஏற்கனவே மத்திய உளவுப் பிரிவு எச்சரித்திருந்தது.
ஆனால் இந்த பலத்த கண்காணிப்பையும் மீறி நன்கு பயிற்சி பெற்ற 12 விடுதலைப் புலிகள் சமீபத்தில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, மாவோயிஸ்டுகளுடன் இணைந்துள்ளனர்.
இவர்கள் கேரளா வழியாக வடக்கு கடலோர ஆந்திராவுக்குள் நுழைந்தனர். பின்னர் 3 பிரிவாக பிரிந்து சென்றுள்ளனர். ஒரு குழு விழிநகரம் பகுதிக்குள் புகுந்துள்ளது.
விடுதலைப் புலிகள், குண்டுகளை வெடிக்கச் செய்வதிலும், தற்கொலைப் படைத் தாக்குதலிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதாலும், மாவோயிஸ்டுகளுடன் அவர்கள் கரம் கோர்த்துள்ளதாலும் இந்திய பாதுகாப்புத் துறையினர் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், புலிகள் தற்போது சேர்ந்துள்ளதால், அது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் சாதகமாக அமையக் கூடும். காரணம், இலங்கை ராணுவத்தினரை எதிர்த்து பல ஆண்டுகளாக கொரில்லா போரில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தவர்கள் விடுதலைப் புலிகள். அதை தற்போது அவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு கற்றுத் தரக் கூடும் என்கிறார் பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர்.
மாவோயிஸ்டுகளின் படைப் பிரிவான மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க விடுதலைப் புலிகளை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தலாம் எனவும் கருதப்படுகிறது.
ஒரு பக்கம் இந்திய ராணுவத்திற்கு எதிராக மாவோயிஸ்டுகளை தூண்டி விடுவது, இன்னொரு பக்கம் இலங்கையில் இழந்த களத்தை தென்னிந்தியாவில் உருவாக்கி, மீண்டும் இலங்கையை எதிர்க்கும் பலத்தைப் பெறுவது ஆகிய இரட்டை நோக்கங்களுடன் மாவோயிஸ்டுகளுடன் புலிகள் கை கோர்த்திருக்கலாம் என்று அந்த செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications