90,000 தமிழர்கள் விடுவிப்பு-சொல்கிறது இலங்கை
கொழும்பு: இலங்கை வட பகுதியில் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களில் 90 ஆயிரம் பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இதனை தமிழர் அமைப்புகள் உறுதிப்படுத்த மறுக்கின்றன.
தமிழ் மக்களை விடுவிப்பது போல போக்குக் காட்டிவிட்டு, பின் வேறொரு ஊரில் கைது செய்து காணாமலடித்துவிடுகிறது அரசு என்று புகார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வட பகுதியில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் போரை அடுத்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. இலங்கையின் மனிதாபிமானமற்ற இந்த செயலால் ஐரோப்பிய நாடுகள் வர்த்தக உறவையே துண்டித்துக்கொள்ளும் அளவுக்குப் போய்விட்டன.
ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க தீவிரமாக வலியுறுத்த ஆரம்பித்துவிட்டது அமெரிக்கா.
அதைத் தொடர்ந்து முகாம்களில் உள்ள தமிழர்கள் சொந்த இடங்களுக்குப் படிப்படியாக அனுப்பப்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வரை சுமார் 90 ஆயிரம் பேரை முகாமிலிருந்து அனுப்பிவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
நாள்தோறும் 4 ஆயிரம் பேர் முகாம்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுப்பப்படும் ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ. 5000 பணமும் ரூ. 20 ஆயித்துக்கான வங்கி டொபாசிட் தொகையும் அளிக்கப்படுவதாக இலங்கையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இதுகுறித்து இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கை:
இதுவரை 12095 குடும்பங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் வவுனியாவில் 2583 குடும்பங்களும் மன்னாரில் 4415 குடும்பங்களும், முல்லைத்தீவில் 2453 குடும்பங்களுக்கு குடியமர்த்தப்பட்டுள்ளன.
அகதி முகாம்களில் மொத்தம் 2 லட்சத்து 88 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதில் 90 ஆயிரம் பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதால் தற்போது அகதி முகாம்களில் 1 லட்சத்து 97255 பேர் மட்டுமே உள்ளனர், கடந்த வாரம் 41,685 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் வவுனியா, மன்னார், முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கி வந்த கிளிநொச்சியிலும் குடியமர்த்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஏராளமான கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளதால் குடியேற்றம் தாமதமாவதாக, அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.
ஆனால் இந்தச் செய்தியை நம்ப மறுத்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் பல்வேறு தமிழர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள்.
மீள் குடியேற்றம் என்ற பெயரில் அனுப்பப்படும் மக்கள் வேறு ஏதைவது ஒரு இடத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் வேறு கொடிய முகாம்களில் அடைக்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.
மேலும் மக்கள் மறு குடியேற்றம் செய்துவரும் இடங்களில் சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களை ஏன் அரசு அனுமதிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications