'ஆன்லைன் வர்த்தகத்தால் உயரே போகும் விலைவாசி'
நெல்லை: ஆன்லைன் வர்த்தகத்தை அரசு ஊக்குவிப்பதால் விலைவாசியை கட்டுபடுத்த முடியவில்லை. எனவே அதை தடை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுபாட்டு குழுத் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. கூட்டத்திற்கு பின் நல்லகண்ணு கூறுகையில்,
15வது பொது தேர்தல் முடிவடைந்த நிலையில் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அரிசி உள்ளிட்ட அத்திவாசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. ரேசன் கடைகளில் கிலோ அரிசி ரூ.1க்கு கிடைத்தாலும் வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் விலை பொதுமக்களை பாதிக்கிறது. துவரம் பருப்பு கிலோ ரூ.100க்கும் விற்கப்படுகிறது.
உளுந்தம் பருப்பு, பாமாயில், பெட்ரோல், டீசல் என எல்லை பொருட்களின் விலையுமே உயர்ந்து கொண்டே வருகிறது. மத்திய அரசு இப்போது மானியங்களை வேறு ரத்து செய்ய போவதாக கூறி வருகிறது. மத்திய அரசின் சாதனைகளை விட விலைவாசிதான் மக்களை பாதித்து வருகிறது.
மக்களுக்குத் தேவையான உணவு பொருட்கள் ஓராண்டுக்கு கையில் இருப்பதாக மத்திய அரசு தெரி்வித்துள்ளது. ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தையும் அரசு ஊக்குவிப்பதால் விலைவாசியை கட்டுபடுத்த முடியவில்லை. பொருட்களின் சில்லரை விலை எங்கோ போய்விட்டது.
உயர்ந்து கொண்டே போகும் விலைவாசியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்கிஸ்டும், இணைந்து தேசிய அளவில் வரும் 17ம் தேதி மறியல் நடந்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications