மாயமான குமரி மீனவர்களை கண்டுபிடிக்க வேட்டை- மேலும் சிலருடன் தொடர்பு கிடைத்தது
சென்னை: மாயமான 16 குமரி மாவட்ட மீனவர்களின் படகுகளில் 6 படகுகளில் இருப்பவர்களுடன் தொடர்பு கிடைத்திருப்பதாக தமிழக அரசும், மீனவர் சங்கங்களும் தெரிவித்துள்ளன.
ஃபியான் புயல் வீசிய சமயத்தில் அரபிக் கடலில் மீன் பிடிக்கப் போயிருந்த குமரி மாவட்ட மீனவர்கள் பலர் காணாமல் போயினர். இவர்களில் பலர் ஆங்காங்கு மீட்கப்பட்டனர்.
இருப்பினும் 16 படகுகளில் இருந்தவர்களின் நிலை குறித்து தெரியாமல் இருந்து வந்தது. இவர்களை கண்டுபிடிக்க கடலோரக் காவல் படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆறு படகுகளைச் சேர்ந்தவர்களுடன் தகவல் தொடர்பு கிடைத்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அழர் கூறுகையில் ஆறு மீன்பிடி படகுகளுடன் தொடர்பு கிடைத்துள்ளது. இருப்பினும் பத்து படகுகளுடன் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கோவா, மகாராஷ்டிரா, குஜராத்தில் கரை சேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அரபிக் கடலில் எட்டு படகுகள் கவிழ்ந்துள்ளன. அவற்றில் 3 படகுகள் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தப் படகுகளில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
காலையில் சில படகுகளை இந்திய கடலோரக் காவல் படை லட்சத்தீவுக்கு அருகே கண்டுபிடித்துள்ளது. அவர்களிடமிருந்து இதுவரை அவசர உதவி கோரி தகவல் எதுவும் வரவில்லை.
இருப்பினும் எட்டு மீனவர்களின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
கோவா, மகாராஷ்டிரா, குஜராத்தில் கரை சேர்ந்த மீனவர்களை குமரிக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அந்த மாநில அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். அவர்களை மீண்டும் மாவட்டத்திற்கு அழைத்து வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை விரைவாக செய்து வருகிறோம் என்றார்.
இதற்கிடையே தூத்தூர் கிராம, நாஞ்சில் மீனவர் உழைப்பாளர் யூனியன் செயலாளர் ஜான் அலாய்சியஸ் கூறுகையில், எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி, எட்டு படகுகள் மெதுவாக கன்னியாகுமரிக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. படகுகள் சேதமடைந்திருப்பதால் அவர்களால் வேகமாக வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
நவம்பர் 1ம் தேதி கிட்டத்தட்ட 500 படகுகளில் ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அந்த சமயத்தில் ஃபியான் புயல் வந்து விட்டதால் அவர்கள் சிதறிப் போய் விட்டனர்.
கடந்த வெளளிக்கிழமை நிலவரப்படி 150 படகுகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அரசுத் தரப்பில் இதுவரை 8 மீனவர்களை மட்டுமே காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications