For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குளிர்கால கூட்டத்தை சூடாக்க போகும் ஸ்பெக்ட்ரம்!

By Staff
Google Oneindia Tamil News

Raja
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்ப அதிமுக, பாஜக, இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு, முல்லைப் பெரியாறு விவகாரம், இலங்கைப் பிரச்சனை, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்கள் ஆகியவை தொடர்பாக மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரச்சனைகளைக் கிளப்புவது என முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பிரச்சனைகளில் பாஜக, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக தீவிரமாக குரல் எழுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

போதுமான ஆதாரங்கள்: ஜெயலலிதா

இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்,

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் செயலாளர் கே.எஸ். ராமசுப்பன், 15.11.2008ல் தொலைதொடர்புத் துறை செயலாளர் சித்தார்த்த போராவுக்கு எழுதிய கடிதத்தில், "தொலைதொடர்பு அமைச்சகத்தின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக் கொள்கை சரியில்லை. மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் கேள்விகளுக்கு தொலை தொடர்புத்துறை அளித்த பதில்கள் திருப்தி அளிக்கவில்லை' என்று கூறியுள்ளார்.

இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில், 'இந்த விவகாரம் முழுவதையும் மத்திய அமைச்சரவை அதிகாரக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது அவசியம்' என்ற கருத்தை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் 1.11.2007 அன்று அலுவலகக் குறிப்பில் தன் கைப்பட பதிவு செய்துள்ளார்.

ஆனால், 2.11.2007 அன்று மத்திய அமைச்சர் ஆ. ராசா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 'முதலில் வருபவருக்கு, முதலில் தருவது' என்ற சர்ச்சைக்குரிய கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ராசா கடிதம் எழுதிய அன்றைய தினமே, பிரதமர் மன்மோகன் சிங் ராசாவை எச்சரிக்கை செய்து கடிதம் அனுப்பினார். அதில், 'இந்த விஷயத்தில் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முன், அனைத்து விவரங்களும் பிரதமருக்குத் தெரியப்படுத்த வேண்டும்' என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன் பிறகு 26.12.2007 அன்று ராசா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரையும், தலைமை சட்ட ஆலோசகரையும் கலந்து ஆலோசித்ததாகவும், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து எந்த முறையை பின்பற்றுவது என்ற முடிவை தான் ஏற்கெனவே எடுத்துவிட்டதாகவும், தன்னுடைய நிலைப்பாடும், இந்திய தொலைதொடர்பு முறைப்படுத்தும் ஆணைக் குழுவின் நிலைப்பாடும் ஒத்துப்போவதாகவும் ராசா குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் 25.10.2007 அன்றைய அலுவலகக் குறிப்பின் மூலம், 'முதலில் வருபவருக்கு, முதலில் ஒதுக்கீடு' என்பதற்கு பதிலாக, ஏல முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என தொலைதொடர்பு முறைப்படுத்தும் ஆணைக் குழுவின் மூத்த அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இத்தகைய ஆவணங்களிலிருந்து, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 'முதலில் வருபவருக்கு, முதலில் ஒதுக்கீடு' என்ற ராசாவின் யோசனைக்கு எதிராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்ததும், பிரதமர் எச்சரித்ததும், தொலைதொடர்பு முறைப்படுத்தும் ஆணைக் குழு நேர்த்தியான ஏல முறை வேண்டும் என ஆலோசனை வழங்கியதும் தெரிய வருகிறது.

யுனிடெக், ஸ்வான் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரம் உரிமங்களை மிகக் குறைந்து விலைக்கு வாங்கி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிக அதிக விலைக்கு விற்றுள்ளது தெளிவாக தெரிகிறது. சர்வதேச ஏல முறை இருந்திருந்தால், சர்வதேச நிறுவனங்கள் அந்த அதிகபட்ச விலையை இந்திய அரசுக்கு அளித்திருக்கும்.

தவறான கொள்கையை வேண்டுமென்றே பின்பற்றியதன் காரணமாக, இந்திய அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ராசா ஏற்படுத்தியிருக்கிறார்.

மத்திய கண்காணிப்பு ஆணையம் இதில் நடைபெற்றுள்ள ஊழலை உணர்ந்து, மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு பரிந்துரை செய்தது. புலனாய்வுத் துறையும், ஊழல் நடைபெற்றதற்கான போதிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் தொலைதொடர்பு அமைச்சகத்தின் தலைமைப் பொறுப்பில் ராசா நீடித்தால், நீதியை நிலைநாட்ட முடியாது. சாட்சிகளை கலைக்கும் இடத்தில் இப்போது அவர் இருக்கிறார். எனவே, ராசாவை தொலைதொடர்பு இலாகாவிலிருந்து பிரதமர் விலக்கி வைக்க வேண்டும். அப்போதுதான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான கொள்கை பின்பற்றப்பட்டதை அறிவதோடு மட்டும் விசாரணை நின்று விடாமல், ரூ.1 லட்சம் கோடி ஊழலின் பயனாளிகள் யார் என்பதையும் கண்டறிய முடியும்.

ஸ்வான், யுனிடெக் நிறுவனங்களின் பங்குதாரர்கள் விசாரிக்கப்பட வேண்டும். மேலும் டைகர் ஹோல்டிங்ஸ், பீகாக், ஜெனிக்ஸ் எக்சிம் போன்ற நிறுவனங்களின் பின்னணி அறியப்பட வேண்டும்.

1960களில் முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் நெருங்கிய வணிகத் தொடர்பு வைத்திருந்தது, மத்திய கிழக்குப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இ.டி.ஏ. குழுமம். அந்நிறுவனத்துக்கும் ஸ்வான் டெலிகாம், ஜெனிக்ஸ் எக்சிம் நிறுவனங்களுக்கும் தொடர்புகள் உள்ளன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், இ.டி.ஏ. குழுமம் மூலம் இந்தியப் பணம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

எனவே, பிரதமர் நீதியை நிலைநாட்ட வேண்டும். அப்போதுதான் அனைத்து உண்மைகளும் வெளிவரும். இல்லையெனில், மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். அது இந்திய ஜனநாயகத்தின் துக்க நாளாகக் கருதப்படும்.

ஆகவே, நியாயமான, நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X