வெறிச்சோடிப் போன சென்னை சென்ட்ரல் நிலையம்
சென்னை: பிளாட்பார பணிகள் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையம், ரயில்கள் மற்றும் பயணிகள் இல்லாமல் இன்று பகல் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3, 4, 5 நடைமேடைகள் நீட்டிப்பு பணிகள் கடந்த மாதம் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இறுதிக்கட்டமாக சிக்னல்கள் மாற்றியமைக்கும் பணி இன்று விறுவிறுப்பாக நடந்தது. இதனால், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரத்துக்கு எக்ஸ்பிரஸ், புறநகர் மின்சார ரயில்கள் சென்ட்ரலுக்கு வரவில்லை.
திருப்பத்தூர் ஏலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை-அரக்கோணம் பகல் நேர விரைவு பயணிகள் ரயில் ஆகியவை இரு மார்க்கங்களிலும் இன்று ரத்து செய்யப்பட்டிருந்தது.
சென்ட்ரலுக்கு வரவேண்டிய பல்வேறு ரயில்களும் கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர், எழும்பூர், பெரம்பூர் ஆகிய நிலைங்களில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்றன.
இரவு 9 மணிக்கு பிறகு ரயில்கள் ஒவ்வொன்றாக சென்ட்ரலில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்திலிருந்தும் சென்ட்ரலுக்கு ரயில்கள் வந்து சேரும். அதே போன்று சென்னைக்கு வரவேண்டிய இரவு நேர ரயில்கள் தாமதமாக வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ரயில்கள் வராது என்ற தகவல் தெரியாமல் ஏராளமான பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலைத்துக்கு வந்து திரும்பிச் சென்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்ட்ரல் பகுதி பயணிகள் மற்றும் ரயில்கள் இல்லாமல் வெறி்ச்சோடிக் காணப்பட்டது விசித்திரமாக இருந்தது.












Click it and Unblock the Notifications