ரூ.2061 விலையில் 40 லட்சம் டிவிக்கள்-அரசு முடிவு
சென்னை: தலா ரூ.2061 என்ற அடிப்படையில் மொத்தம் 40 லட்சம் 'கலர் டிவி'க்களை 17 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: தமிழகத்தில் இதுவரை 91 லட்சத்து 99 ஆயிரத்து 65 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது மேலும் 40 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இவற்றை கொள்முதல் செய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் முன்னிலையில் கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டன.
அதில் 20 நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் இருந்தன. இக்குழு முன்னிலையிலேயே இந்த ஒப்பந்தப்புள்ளி உறைகள் பிரிக்கப்பட்டு ஆவணங்கள் முதல்நிலை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த முதல்நிலை ஆய்வில் 20 நிறுவனங்களும் தகுதி பெற்றன. விரிவான ஆய்வுக்குப்பின், ஸ்ரீகுமார் டிரேடிங், தேவி மினரல் ரிசோர்சஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அருணாசலா இம்பெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் நிராகரிக்கப்பட்டன.
தகுதிபெற்ற மீதமுள்ள 17 ஒப்பந்ததாரர்களின் விலைப்புள்ளி உறைகள் நேற்று காலை முதல்வர் கருணாநிதி தலைமையிலான சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் குழுவினர் மற்றும் ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்ததாரர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன.
குறைந்த விலைப்புள்ளி வழங்கிய 'க்ளியர் விஷன் இன்டஸ்ட்ரீஸ்' மற்றும் 'பீ.ஜீ.இன்டர்நேஷனல்' ஆகிய இரண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தொலைக்காட்சிப் பெட்டிக்கான இறுதி விலையாக ரூ.2,061 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஒரு டிவி விலை ரூ.2061 என்ற அடிப்படையில் மொத்தம் 40 லட்சம் டிவிக்களை 17 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதென கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் தலைமையிலான குழுவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் டி.சுதர்சனம் (காங்கிரஸ்), வை.சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), பூவை மு.ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் பாஸித் (முஸ்லிம் லீக்), து.ரவிகுமார் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் இடம்பெற்றனர்.


Click it and Unblock the Notifications
