முகாம் தமிழர்களும் வாக்களிக்க வசதி-ரணில் முயற்சி
சென்னை: இலங்கை தேர்தலில் முகாம்களில் உள்ள தமிழர்களும் வாக்களிக்க இலங்கை தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
இலங்கையின் முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கே டெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசிய பின் கொழும்பு செல்வதற்காக இன்று காலை சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை அவர்களது சொந்த ஊரில் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கை எங்களுக்கு திருப்தியாக இல்லை.
நடைபெற உள்ள தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் சுதந்திரமாகவும் ஜனநாயக முறையில் வாழவும் நடவடிக்கை எடுப்போம்.
இலங்கையில் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவோம். இலங்கையில் தற்போது அமலில் உள்ள அவசர நிலை பிரகடனத்தை வாபஸ் பெறுவோம்.
சரண் அடைய வந்த விடுதலைப்புலிகள் தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு ராஜபக்சே சகோதரர் ராணுவத்திற்கு உத்தரவிட்டதாக முன்னாள் தளபதி ஃபொன்சேகா கூறி உள்ளார். இதற்கு இலங்கை அரசு உடனடியாக பதில் அளிக்கவேண்டும்.
இலங்கையில் நடைபெறும் தேர்தலில் முகாம்களில் உள்ள தமிழர்களும் வாக்களிக்க வேண்டும். இதற்காக நாங்கள் இலங்கை தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications