For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெட்லி எங்களது ஏஜென்ட்டாக பணியாற்றவில்லை -சிஐஏ மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

CIA
வாஷிங்டன்: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பத்தில் தொடர்புடைய ஹெட்லி எங்களது ஏஜென்ட்டாக பணிபுரியவில்லை என்று அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. மறுத்துள்ளது.

இந்தியா, டென்மார்க்கில் தீவிரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக ஹெட்லியும், ராணாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மும்பைத் தாக்குதலில் முக்கியத் தொடர்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், ஹெட்லி, அமெரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் ரகசிய ஏஜென்ட்டாக பணியாற்றிய புதிய தகவலும் சமீபத்தில் வெளியாகியது.

அதேபோல, சிஐஏவுக்கு அவர் ஏஜென்ட்டாக இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பாக அமெரிக்க உளவுத் துறை இந்திய உளவுத்துறைக்கு எச்சரிக்கை அனுப்பியிருந்தது. கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டது.
தாஜ்மஹால் ஹோட்டல் மற்றும் சி.எஸ்.டி ஆகிய பகுதிகளை தீவிரவாதிகள் குறிவைத்ததாக எச்சரிக்கப்பட்டது.

இந்திய பாதுகாப்புத் துறையும் இதை அலட்சியம் செய்யாமல் இப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியது. கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த இடங்கள் உஷாராக கண்காணிக்கப்பட்டு வந்தன. பின்னர் தாக்குதல் ஏதும் நடக்காததால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டன.

இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் தீவிரவாதிகள் மும்பை கடல் வழியாக உள்ளே புகுந்து தாஜ், நாரிமன் ஹவுஸ், ஓபராய், டிரைடன்ட், சி.எஸ்.டி என பல இடங்களிலும் பிரிந்து வெறியாட்டம் நடத்தினர்.

ஹெட்லி மூலமாக இந்த சதித் திட்டம் குறித்து சி.ஐ.ஏ.வுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்கும் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் ஹெட்லியை பயன்படுத்திக்கொண்ட சி.ஐ.ஏ, அவனின் தீவிரவாத தொடர்புகள் மற்றும் நடவடிக்கைகள் தன் நாட்டுக்கு எதிராகவே திரும்புவதை உணர்ந்து தற்போது கைது செய்து விட்டது.

சி.ஐ.ஏ.வின் மறைமுக ஆதரவு இருந்ததால் தான் 2009 மார்ச் மாதத்தில் ஹெட்லி இந்தியா, பாகிஸ்தானில் தடையில்லாமல் உலவ முடிந்தது என்றும் கூறப்படுகிறது.

தற்போது ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு அமெரிக்கா தயங்குவதும் இந்த காரணத்திற்காகத் தான் என சுட்டிக் காட்டப்படுகிறது. ஹெட்லி இந்திய அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டால், முழு விவரங்களும் அம்பலமாகி விடும். அப்போது அமெரிக்காவுக்கு ஏற்படக் கூடிய தர்மசங்கடத்தை தவிர்க்கவே இந்த இழுத்தடிப்பு என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பிரபல இந்திபட டைரக்டர் மகேஷ்பட் மகன் ராகுல்பட்டிடம் நடத்திய விசாரணையில், 'ஹெட்லி அமெரிக்க சி.ஐ.ஏ.வில் வேலை பார்ப்பதாக நினைத்துத் தான் நான் அவரிடம் பழகினேன்.

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளின் வரலாறு அத்தனையும் ஹெட்லிக்கு அத்துபடி. அவர் வைத்திருந்த புத்தகங்கள் மற்றும் பல ஆவணங்கள் எல்லாம் எனக்கு அவர் மீது அப்படித்தான் நம்பிக்கையை ஏற்படுத்தியது' எனக் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கதாகும்.

ஹெட்லிக்கும் சி.ஐ.ஏ.க்கும் உள்ள தொடர்பு குறித்து தகவல்கள் கசிந்துகொண்டிருக்கும் நிலையி்ல் இந்தத் தகவல்களை திட்டவட்டமாக மறுப்பதாக சி.ஐ.ஏ கூறியுள்ளது.

இதுகுறித்து சி.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் மேரி இ ஹார்ஃப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது நடந்து வரும் வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், ஆனால் இதில் தொடர்புடைய எந்த நபரும் சி.ஐ.ஏ.வுடன் எந்த காலத்திலும் பணியாற்றவில்லை. இதுசம்பந்தமாக வரும் செய்திகள் தவறானது என்றார்.

ஹெட்லி - விளக்கம் கேட்டு எதிர்க்கட்சிகள் அமளி

இதற்கிடையே, ஹெட்லி குறித்து, அமெரிக்கா வழங்கி வரும் ஒத்துழைப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ராஜ்யசபாவில் இன்று பாஜக தலைவர் அருண் ஜேட்லி இந்த விவகாரத்தைக் கிளப்பினார்.

அவர் கூறுகையில், ஹெட்லி விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வகை செய்யும் விதத்தில், கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என நான் நோட்டீஸ் கொடுத்துள்ளேன்.

பாகிஸ்தானிய அமெரிக்கரான ஹெட்லி ஒரு அமெரிக்க ஏஜென்ட் என செய்திகள் வருகின்றன. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவர் அமெரிக்காகவுக்காக உளவு பார்த்துள்ளார். எனவே ஹெட்லி விவகாரம் நாளுக்கு நாள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

மேலும் இந்தியாவுக்கு வர அவர் எடுத்த விசா குறித்த ஆவணங்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. இதுகுறித்தும், இந்த வழக்கில் அமெரிக்கா அளித்து வரும் ஒத்துழைப்பு குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும் என்றார்.

இதே கோரிக்கையை சமாஜ்வாடி, இடதுசாரி கட்சிகளும் முன்வைத்துப் பேசின.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X