யுவராஜ் உடல் நலம் பாதிப்பு-பன்றிக் காய்ச்சலா?
நாக்பூர்: விரல் வலியால் அவதிப்பட்டு வரும் யுவராஜ் சிங்குக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2வது ஒரு நாள் போட்டியில் அவர் ஆடவில்லை. அவருக்கு பன்றிக் காய்ச்சலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ராஜ்கோட்டில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியிலும் யுவராஜ் சிங் விளையாடவில்லை. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ராஜ்கோட் போட்டியில் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது அவருக்கு காய்ச்சல் அடிக்கிறது. இதனால் இன்று நாக்பூரில் நடக்கும் 2வது போட்டியிலும் யுவராஜ் பங்கேற்கவில்லை.
யுவராஜுக்கு வந்துள்ளது சாதாரண காய்ச்சலா அல்லது பன்றிக் காய்ச்சலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே ஸ்ரீசாந்த்துக்கு பன்றிக் காய்ச்சல் வந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், மற்ற வீரர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரவி விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் யுவராஜ் சிங்குக்கு பன்றிக் காய்ச்சல் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை முடிவில் யுவராஜுக்கு பன்றிக் காய்ச்சலா இல்லையா என்பது தெரிய வரும்.
இதற்கிடையே கெளதம் கம்பீருக்கு பன்றிக் காய்ச்சல் வந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்பது பின்னர் உறுதியானது.
முன்னதாக நேற்று யுவராஜ் சிங் குறித்து கேப்டன் டோணி கூறுகையில், யுவராஜ் சிங்குக்கு காய்ச்சல் வந்துள்ளது. வைரஸ் காய்ச்சலாக சந்தேகிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications