பிரியாணியும் திருமங்கலம் பார்முலாவும்!-விஜய்காந்த்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜனநாயகத்தில் வேண்டாதவர்களை நீக்கவும், வேண்டியவர்களை ஆட்சிக்குக் கொண்டு வரவும் வகைசெய்வதே தேர்தல்.
ஆனால் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும். இதற்குத் தேர்தல் ஆணையம்தான் நேரடி பொறுப்பு என்றாலும், நிர்வாக ரீதியில் மாநில அரசுதான் இதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
ஆனால் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல்களில் இவை நிறைவேறுமா?
மேலை நாடுகளில் இடைத் தேர்தல்களின்போது அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால் இங்கு ஆட்சி செய்யும் கோட்டையே காலியாகிவிடுகிறது.
அமைச்சர்கள் தொகுதிகளில் முகாமிடுகின்றபொழுது அதிகாரிகள் புடைசூழ வருவதும், ஆணைகள் பிறப்பிப்பதும், அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
காவல்துறை உதவியோடு எதிர்க்கட்சிகளின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒரு ஓட்டப்பந்தயம் போல பல அரசியல் கட்சிகளுக்கிடையே ஆரோக்கியமாக நடைபெறவேண்டிய அரசியல் போட்டி, சமூக விரோதிகளைக் கொண்ட போர்க்களமாகவே ஆக்கப்பட்டுவிட்டது.
வாக்காளர்களை ஒரு புறத்தில் பயமுறுத்துவதும், மறுபுறத்தில் பணம், பிரியாணி என்று ஆசை காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதையே திருமங்கலம் பார்முலா என்று கொண்டாடுகின்றனர்.
அது ஜனநாயகத்துக்கு வெட்டப்பட்டுள்ள மரணப் படுகுழி என்று நல்லவர்கள் வேதனைப்படுகின்றனர்.
மீனவ வாக்காளர்களைக் கவரவேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதின் பேரில் மத்திய அரசு மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை சட்ட மசோதவை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அது மீண்டும் கொண்டுவரப்படமாட்டாது என்ற உறுதி எதுவுமில்லை. ஆகவே மீனவர்கள் இதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வாக்களர்களுக்குச் சிறிதளவு பணம் கொடுத்து வெற்றிபெற்று பதவிக்கு வந்தபின் பெருமளவுக்கு ஊழல்
செய்கின்றனர். மக்களின் வரிப்பணம் இதனால் முக்கால் பங்கு கொள்ளை போகிறது.
தமிழ் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் ஆட்சிகளை மாற்றி, மாற்றி பார்த்தும் கூட ஏழ்மையை ஒழிக்க முடியவில்லை. மக்களுக்காக பாடுபடக்கூடிய நல்லவர்கள் என்றைய தினம் தேர்தல்களில் ஈடுபட்டு வெற்றிபெறுகிறார்களோ அன்றைய தினம்தான் மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படும்.
தேர்தலில் செலவழிக்கப்படும் பணம் அவர்களது உழைப்பில் வந்ததல்ல. மக்கள் வரிப்பணத்தில் பதவிக்கு வந்தவர்கள் மனசாட்சியை விற்று கொள்ளையடித்ததுதான். ஆகவே கடந்த ஆட்சிக் காலங்களில் போட்டி போட்டுக் கொண்டு ஊழலில் திளைத்தவர்கள், இப்போது போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள்.
எனவே பணம் வாங்கிய மக்கள் மனசாட்சிப்படி அவர்களுக்குத்தான் ஓட்டுப் போடவேண்டுமென்ற
அவசியமில்லை.
பணத்தைக்கொண்டு தேர்தலில் ஜெயிப்பதும், பிறகு பணம் சம்பாதிப்பதும், பிறகு அதே பணத்தைக் கொண்டு மறுபடியும் தேர்தலில் ஜெயிப்பது என்ற விஷச் சக்கரத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு இந்த இடைத் தேர்தல்களை மக்கள் பயன்படுத்த வேண்டும்.
தேமுதிக தொடங்கியதில் இருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய பண மழையிலும் தமிழ்நாட்டு மக்கள் கணிசமான ஆதரவு அளித்து வருகிறார்கள்.
மக்கள் நீதியின் திரண்டு நிற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications