வந்தவாசியில் 85, திருச்செந்தூரில் 78 சதவீத வாக்குகள் பதிவு- 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை

Subscribe to Oneindia Tamil

Naresh Gupta
சென்னை: தமிழகத்தில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் 81.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் வந்தவாசியில் அதிகபட்ச அளவாக 85 சதவீத வாக்குகளும், திருச்செந்தூரில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகின.

திமுகவில் சேருவதற்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் திருச்செந்தூரிலும், திமுக உறுப்பினர் ஜெயராமன் மரணமடைந்ததால் வந்தவாசி (தனி) தொகுதியிலும் இடைத் தேர்தல் நடந்தது.

நேற்று மிகவும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்தது. திருச்செந்தூரில் தொடக்கம் முதலே விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் வந்தவாசியில் பிற்பகல் வரை படு மந்தமாக இருந்த வாக்குப் பதிவு, அதன் பின்னர் படு வேகமாக நடந்து அதிகபட்ச வாக்குப் பதிவைக் கண்டது.

திருச்செந்தூர் தொகுதியில் 78.05 சதவீத வாக்குகளும், வந்தவாசியில் 84.8 சதவீத வாக்குகளும் பதிவாகின.

திருச்செந்தூர் தொகுதியில், வாக்குப் பதிவு முடிவடைந்ததும், பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

வந்தவாசி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வந்தவாசியில் உள்ள அரசினர் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடைபெறுகிறது. காலை 8 வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. பிற்பகல் 12 மணிக்குள் முடிவுகள் தெரிய வரும்.

கள்ள ஓட்டு இல்லை... நரேஷ் குப்தா

இடைத் தேர்தல் வாக்குப் பதிவு குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெற்ற வந்தவாசி மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

திருச்செந்தூர் தொகுதியில் ஒரு சில புகார்கள் வந்தன. இதேபோல வந்தவாசி தொகுதியில் இருந்தும் போன்மூலம் புகார்கள் வந்தன. வெளியூர் ஆட்கள் தொகுதியில் தங்கியிருப்பதாக புகார்கள் அதிகமாக வந்தன.

இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி ஆகியோருக்கு உத்தரவிட்டேன். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத முக்கிய அரசியல் பிரமுகர்கள் இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் இருந்து தேர்தலுக்கு முன்பே வெளியே சென்றுவிட்டனர்.

வாக்குப்பதிவு மையத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்காக வெப்கேமரா மூலம் ஒவ்வொரு வாக்காளர்களையும் படம் எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இது கள்ள ஓட்டு போடாமல் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனால் கள்ள ஓட்டு எதுவும் பதிவாகவில்லை.

மதியம் 3 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறையும், மதியம் 3 மணிக்கு மேல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும் வாக்குப்பதிவு பற்றி அதிகாரிகள் தகவல் தெரிவித்துக்கொண்டு இருந்தனர்.

செல்போன்களை வாக்குச்சாவடியின் உள்ளே உள்ள ஏஜெண்டுகள் பயன்படுத்தியதாக புகார் வந்தது. வாக்குச்சாவடியின் உள்ளே செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. எனவே இதுபோல எதாவது நடந்து இருந்தால் விசாரணை நடத்தப்படும்.

வந்தவாசி தொகுதியில் ஓட்டுப்போட ஒரு அமைச்சர் பணம் கொடுத்ததாக எந்த புகாரும் வரவில்லை. திருச்செந்தூர் தொகுதியில் ஓட்டுப்போட பிரியாணி கொடுத்ததாக நிருபர்கள்தான் சொல்கிறீர்கள். இது பற்றி எனக்கு எந்த புகாரும் வரவில்லை.

திருச்செந்தூர் தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் விதிமுறையை மீறி நேற்று பிரசாரம் செய்ததாக வந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றார்.

'ஓ' போட்ட 30 பேர்...

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்கும் 49ஓ படிவத்தை வந்தவாசி தொகுதியில் வெறும் 30 பேர் மட்டுமே பயன்படுத்தியிருந்தனர்.

வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தலில் பாமகவினர் யாரும் வாக்களிக்க மாட்டார்கள், 49 ஓ படிவத்தை பயன்படுத்துவார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வந்தவாசி தொகுதியில் 30 பேர் மட்டுமே அந்தப் படிவத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+