For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாயமான காங். எம்.பி. ராஜகோபால் ஹைதராபாத் மருத்துவமனையில் தோன்றினார்

By Staff
Google Oneindia Tamil News

Rajagopal at Hyderabad airport
ஹைதராபாத்: விஜயவாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மாயமானா காங்கிரஸ் எம்.பி லகடபதி ராஜகோபால் ஹைதராபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதன் முதலில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தவர் ராஜகோபால். இதுவரை அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை.

டெல்லியிலிருந்து ஹைதராபாத் திரும்பிய ராஜகோபால், ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார் ராஜகோபால். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், அவர் நேற்று மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க போலீஸார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்று காலை தனது நண்பர்களோடு அங்கிருந்து தேசியக் கொடியைப் பிடித்தபடி வெளியேறிய ராஜகோபால் போலீஸார் சுதாரித்து ஓடி வருவதற்குள் தப்பி விட்டார்.

இதைத் தொடர்ந்து விஜயவாடா முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். ஹைதராபாத்துக்கு அவர் வந்து போராட்டத்தில் குதிக்கக் கூடும் என்பதால் அங்கும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.

ராஜகோபால் மீது போலீஸார் ஏற்கனவே தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜகோபால் காணாமல் போனதால் ஆந்திராவில் புதிய பரபரப்பு ஏற்பட்டது. அவரைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன.

இந்த நிலையில், இன்று அதிகாலை ஹைதராபாத் வந்த ராஜகோபால், அங்குள்ள பிரபல நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு வந்து சேர்ந்தார். இதையடுத்து ராஜகோபாலால் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்துள்ளது.

ஆனால் ராஜகோபால் ஹைதராபாத் வந்துள்ளதால், அவரது ஆதரவாளர்கள் ஹைதராபாத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்று அச்சம் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

ராஜசேகர ரெட்டி தம்பி உண்ணாவிரதம்:

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி. விவேகானந்த ரெட்டி, கடப்பா மருத்துவமனையில் 6வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவர் மறைந்த ராஜசேகர ரெட்டியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய உடல் நிலை பலவீனமடைந்ததைத் தொடர்ந்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கும் அவர் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.

அதேபோல எம்.எல்.ஏக்கள் ஆதி நாராயண ரெட்டி, ஸ்ரீகாந்த் ரெட்டி ஆகியோரும் உண்ணாவிரதம் இறுந்து வருகின்ரனர். இவர்களுடன் சேர்ந்து 16 காங்கிரஸாரும் கடப்பாவில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந் நிலையில் தெலுங்கானா மாநிலம் அமைக்கக்கோரி ஒரு தரப்பினரும் தெலுங்கானா கூடாது என்று மற்றொரு தரப்பினரும் ஆந்திராவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருவதால் இன்று 12வது நாளாக பஸ்கள் ஓடவில்லை.

அண்டை மாநிலங்களில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள், லாரிகளும் இயங்கவில்லை. ரயில்கள் மட்டும் பலத்த பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.

இதனால் திருப்பதி செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது.

காங். உயர் மட்ட கூட்டங்கள் ரத்து:

இந் நிலையில் இன்று நடக்கவிருந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த கட்சியின் பொதுக் குழுக் கூட்டமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்த இரு கூட்டங்களிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுவதாக இருந்தார்.

தெலுங்கானா பிரச்சனை பெரிதாகியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X