எடப்பாடி கொறடாவுக்கே சூப்பர் பவர்.. சிவசேனா வழக்கில் சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னது தெரியுமா? பாயிண்டை பிடித்த இன்பதுரை!
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான கொறடாவுக்கு தான் சூப்பர் பவர் உள்ளதாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தினை சுட்டிக்காட்டி இன்பதுரை ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று புதன்கிழமை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. கடந்த மே 10 ஆம் தேதி விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் அர்லேகர் 13 ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இந்த நிலையில் அதிமுகவில் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பினர் விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 3-இல் 2 பங்கு பேர் மாற்று கட்சிக்கு ஆதரவு அளித்தால் கட்சித் தாவல் தடை சட்டம் பாயாது என்பதால் இந்த முடிவினை அவர்கள் எடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக இன்பதுரை "கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும் என கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.
சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.
சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி:
"ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது."
மேலும், உச்ச நீதிமன்றம் "சட்டமன்றக் கட்சி" மற்றும் "அரசியல் கட்சி" இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை "அரசியல் கட்சியை" தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும்.
எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை!" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications