ஜனவரி 20ல் பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல்

பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் பெரியண்ணன். இவர் சமீபத்தில் மரணமடைந்தார். இதனால் இத்தொகுதியில் இடைத் தேர்தல் வந்துள்ளது.
பெரியண்ணன் பல கட்சிகளில் இருந்தவர். ஆரம்பத்தில் இவர் அதிமுகவைச் சேர்ந்தவராக இருந்தார். பின்னர் பாமகவில் இணைந்தார். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலின்போது பென்னாகரம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார்.
ஆனால் பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு சீட் கொடுக்கப்பட்டதால் பெரியண்ணன் சுயேச்சையாக நின்றார், தோல்வியைத் தழுவினார்.
பின்னர் திமுகவில் சேர்ந்தார். 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் திமுக சார்பில் நின்று வென்றார்.
மறைவுக்கு முன்பு தர்மபுரி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பொறுப்பை வகித்து வந்தார் பெரியண்ணன். தற்போது அவரது மகன் இன்பசேகரன் தர்மபுரி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருக்கிறார்.
தற்போது காலியாக உள்ள பென்னாகரம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 20ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் வருகிற டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய ஜனவரி 2-ந் தேதி கடைசி நாளாகும். ஜனவரி 4-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.
மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 6-ந் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
ஜனவரி 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பென்னாகரம் தொகுதி உள்ள தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் நிலவரம்...
மொத்த ஓட்டுகள் - 2,08,084
பதிவானவை - 1,49,938
பி.என்.பெரியண்ணன் (தி.மு.க.) - 74,109
எஸ்.ஆர்.வெற்றிவேல் (அ.தி.மு.க.) - 47,177
பி.தண்டபாணி (தே.மு.தி.க.) - 10,567
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி (சுயே) - 9,868
கே.பி.கந்தசாமி (பா.ஜ.க) - 933.












Click it and Unblock the Notifications