For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையுடன் 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் இணைப்பு

By Staff
Google Oneindia Tamil News

Chennai Corporation
சென்னை: சென்னை மாநகராட்சியின் எல்லைகள் விரிவாக்கப்படுகின்றன. 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 கிராமப் பஞ்சாயத்துக்களை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து சென்னைப் பெருநகர மாநகராட்சி உருவாகிறது.

அதேசமயம், சென்னை -தாம்பரம், சென்னை -ஆவடி ஆகிய இரு புதிய மாநகராட்சிகள் அமைப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள ஆணை:

சென்னை மாநகராட்சி தற்போது 174 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது. சென்னை மாநகரின் தற்போதைய எல்லை 1978-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை பெருநகர் பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. வளர்ந்து வரும் தேவைகளை கருத்தில் கொண்டு தரமான சாலைகள், குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள், கழிவுநீர் அகற்றுதல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியுள்ளது.

சென்னை பெருநகர் பகுதியில் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வரும் சேவைகளின் நிலை பெருமளவில் வேறுபடுகின்றன. அவை போதுமானதாகவும் இல்லை.

மாநகருக்கு அருகாமையில் மற்றும் தொடர்ச்சியாக அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, தற்போதைய சென்னை மாநகராட்சிப் பகுதியினை விரிவாக்குவதற்கு போதுமான வாய்ப்புகளும், அவசியமும் உள்ளன என கருதப்படுகிறது.

இதுதொடர்பாக அரசு அமைத்த குழு, சென்னையை சுற்றி புதிய மாநகராட்சிகள் அமைப்பது குறித்து விரிவான அறிக்கையை, அரசிடம் அளித்தது. இதனைத் தொடர்ந்து, புதிய மாநகராட்சிகள் அமைப்பது குறித்து, தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசிக்கவும், இந்த ஆலோசனைகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்கொள்ளவும் ஆணைகள் வெளியிடப்பட்டன.

தொடர்புடைய அனைத்து தரப்பினரின் ஆலோசனைகள் மற்றும் மாற்றுக் கருத்துக்களையும் அந்தக் குழு விவாதித்து, அரசின் இறுதி முடிவுக்கென 2 பரிந்துரைகளை அளித்தது.

சென்னைப் பெருநகர மாநகராட்சி...

அந்த பரிந்துரையில், சென்னை பெருநகர் பகுதியின் 800 சதுர கி.மீ. பகுதியினை உள்ளடக்கும் வகையில் சென்னை மாநகராட்சிப் பகுதியின் பரப்பளவினை விரிவாக்குதல், இதனை சென்னை பெருநகர மாநகராட்சி' என்று அழைத்தல் மற்றும் திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர் மற்றும் ஆலந்தூர் நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி சென்னை மாநகராட்சிப் பகுதியின் பரப்பளவினை 426 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் செய்தல்; ஆவடி (168 ச.கி.மீ.) மற்றும் தாம்பரம் (218 ச.கி.மீ.) ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு இரண்டு புதிய மாநகராட்சிகளை உருவாக்குதல் என குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னையில் பெரிய மாநகராட்சியை அமைப்பதால் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளலாம். நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் சரியான அளவில் பயன்படுத்தும் வகையில் வளர்ச்சியை திட்டமிடலாம்.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள பகுதிகள் சென்னை என்ற அடையாளத்தை பெறும். இது, பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியத்துவம் பெறும்.

சென்னை மாநகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் நகர்ப்புறமயமாக்கலின் வளர்ச்சி வீதம் அதிகமாக உள்ளது. இப்பகுதிகள் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உள்ளன. இந்த முதலீடுகளை வழிமுறைப்படுத்துவதும், நெறிப்படுத்துவதும் பெரியதொரு உள்ளாட்சி அமைப்புக்கு எளிதானதாகும்.

இதைத் தொடர்ந்து, சில கொள்கை முடிவுகளை மேற்கொண்டு, அவ்வாறே ஆணையிடுகிறது.

இதன்படி, சென்னை பெருநகர்ப் பகுதியில் மேலும் மாநகராட்சிகளை அமைப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் ஜுலை 2009 அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி வரிவாக்கம் தொடர்பான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம்; மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள சென்னை-ஆவடி மற்றும் சென்னை-தாம்பரம் ஆகியவற்றை பொருத்தவரையில் முடிவு பின்னர் மேற்கொள்ளப்படும்.

இதன் அடிப்படையில் கீழ்கண்ட பகுதிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து மாநகராட்சி விரிவாக்கப்படலாம்.

எவை, எவை...

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம் நகராட்சிகள் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் மற்றும் உள்ளகரம்-புழுதிவாக்கம் நகராட்சிகள் சென்னையுடன் சேர்க்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சின்ன சேக்காடு, புழல், போரூர் பேரூராட்சிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் பேரூராட்சிகள், சென்னை மாநகராட்சியில் இணையும்.

திருவள்ளூர் மாவட்டத்தில், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இடையஞ்சாவடி, புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சடையங்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடப்பெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், நொளம்பூர், காரம்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முகலிவாக்கம், மணப்பாக்கம், புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி ஆகிய ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைகின்றன.

தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகள் பாதிக்கப்படாத வண்ணம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2011-ம் ஆண்டு முடிவடைந்தவுடன், புதிய மாநகராட்சி அமைக்கப்படலாம்.

உத்தேசிக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் புதிய வார்டுகள், மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிக்கப்படலாம். சென்னை மாநகராட்சியின் தற்போதைய வார்டுகளும் மக்கள் தொகையின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படலாம்.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள பகுதிகளுக்கான வார்டு எல்லைகளை நிர்ணயித்தல், மண்டலங்கள் அமைத்தல், தற்போதைய வார்டுகளை மாற்றியமைத்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து பணிகளையும் சென்னை மாநகராட்சி ஆணையர் மேற்கொள்ளவும், இப்பணிகளை மேற்கொள்வதற்கென, தேவையெனில் சிறப்பு அதிகாரியை பணியமர்த்தி கொள்வதற்கு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கியும் அரசு ஆணையிடுகிறது.

மேலும், சிறப்பு அதிகாரியின் அறிக்கை 6 மாத காலத்துக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அரசு ஆணையிடுகிறது.

அரசு, மேற்சொன்ன கொள்கை முடிவினை செயல்படுத்துவதற்கு தொடர்புடைய சட்ட வகைமுறைகளையும், சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X