"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி!
சென்னை: "கட்சித்தாவல் புகார் இருக்கும்போது ராஜினாமா செய்வது அரசியலமைப்புக்கு எதிரானது. சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இல்லை. அவர் முடிவில் நீதிமன்றம் தலையிடலாம். 3 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றம் செல்வோம்" என அதிமுக எம்.பி இன்பதுரை எச்சரித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்ற முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு அளித்தனர். சபாநாயகரை நேரில் சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓஎஸ் மணியன், அதிமுக எம்.பி இன்பதுரை உள்ளிட்டோர் வலியுறுத்தினர். அப்போது அவர்கள் கட்சி தாவல் புகாருக்கு ஆளான எம்எல்ஏக்கள் ராஜினாமாவை எப்படி ஏற்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதிமுக ராஜ்யசபா எம்.பியும், வழக்கறிஞருமான இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கட்சித் தாவல் தடைச் சட்டத்தை (Anti-Defection Law) செயல்படுத்த வேண்டும் எனச் சொல்லி நாங்க ஒரு புகார் கொடுத்து அது நிலுவையில் இருக்கும்போது, சபாநாயகர், அந்த மூன்று பேர் மீது கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஏற்கலாமா, கூடாதா? அதுதான் சட்டப் பிரச்சனை.
ஏற்க முடியாது. ஏனென்றால் சட்டமன்ற விதிகள் 21-ல எனக்கு அதிகாரம் இருக்குன்னு சொல்றாரு. ஆனா அவர் மைண்ட அப்ளை பண்ணனும்னுதான் சட்டம் சொல்லுது. நோட்டிபிகேஷன் எத்தனை மணிக்கு? நேத்து நைட்டு. நோட்டிபிகேஷன் வந்த பிறகுதான் அவங்க கட்சியை விட்டு அவங்களுடைய ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதுங்கிறது, மைக்ல பேசுறது ஆகாது. சட்டமன்ற உறுப்பினர், சட்டசபை பேரவைத் தலைவர் அறிவித்தது ஆகாது. நோட்டிபிகேஷன் வரணும்.
நோட்டிபிகேஷன் வர்றதுக்கு முன்னால மாடிப் படி ஏறிப் போய் தவெக-வினுடைய அமைச்சரைச் சந்திக்கிறாங்க. அந்த அமைச்சர் அவங்களுக்கு சால்வை அணிவிக்கிறார். அதுவே வரவேற்புதான். கார்டு குடுக்குறாங்க, அது வந்து எல்லா வலைதளங்கள்லயும் வந்துச்சு. அதுக்கப்புறம் இந்த எதிர்ப்பு தெரிஞ்ச உடனேதான், ஃபார்மலா இணைத்தவர்கள், அப்புறம் இணைப்புன்னு ஒரு நாடகத்தை 8 மணிக்கு மேல நடத்துறாங்க. ஆனா அப்பவும் நோட்டிபிகேஷன் வரல.
அப்போ நோட்டிபிகேஷன் வராம இருக்கும்போது அவர்கள் இன்னொரு கட்சிக்குப் போய் சேர்ந்திருக்காங்க. அப்படி சேர்ந்தவர்களுடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக நீங்க அறிவிக்கக் கூடாது, அதை திரும்பப் பெறணும்கிறதுதான் எங்களுடைய மனு. ஏன்னா இது அவர் ஏத்துக்கிறது ஏத்துக்காம இருக்கிறது ஒரு பக்கம், ஆனா நீதிமன்றம் இருக்கு. அப்போ சட்டப்பேரவை உறுப்பினர்... சட்டமன்றப் பேரவைத் தலைவர் என்ன சொல்றாருன்னா அவருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறதா சொல்றாரு. அதெல்லாம் போயிருச்சு சார். பாலாசாஹேப் பாட்டீல் அப்படின்னு ஒரு கேஸ் கர்நாடகால வந்துச்சு. அந்த கேஸ்ல பேரவைத் தலைவருடைய பவர்ஸ் என்னன்னு விலாவரியா சொல்லிட்டாங்க.
கட்சி தாவல் தடைச் சட்டம் இருக்கும்போது ராஜினாமா பண்றதுங்கிறது சட்டப்பூர்வமானது அல்ல, அது அரசியலமைப்புக்கு விரோதமானது. ஏன்னா நீங்க தவறு பண்ணுவீங்க, உங்க மேல ஆண்டி டிபெக்ஷன் லாவை வந்து இன்வோக் பண்ணச் சொல்லி ஒரு கட்சித் தலைவர் கொடுத்திருக்காரு, நீங்க பின்வாசல் வழியா ராஜினாமா பண்ணிட்டு தப்பிச்சுப் போயிரலாம்னு நினைச்சா, அப்போ அந்த சட்டத்தோட பலன் என்ன?
எனவே அப்படி பண்ண முடியாது, அந்த சட்ட நடவடிக்கை தொடரும். சட்டப்பேரவைத் தலைவருடைய நடவடிக்கையில நீதிமன்றம் தலையிட முடியாதுன்னு பொய்யா நம்பிட்டு இருக்காங்க, அப்படி இல்ல. எல்லாத்துலயும் தலையிட்டு இருக்கு. பி.வி. ரமணா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் வந்து இதைத் தெளிவா தீர்ப்பு கொடுத்துட்டாங்க. எனவே இது தவறு. இது பேரவையா, இல்ல தவெக கட்சி அலுவலகமா?
எந்த ஜி.ஓ போட்டாலும் அதைத் திரும்பப் பெற அதிகாரம் பேரவைத் தலைவருக்கு இருக்கு. ரிவோக் பண்ணலன்னா இது கேள்வி எழுப்பப்படும். நீதிமன்றத்துக்கு செல்வது குறித்து எங்க பொதுச்செயலாளர் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "தங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து விடும் என்பதால் 3 பேரும் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 5 நிமிடத்தில் தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது
இது தலைமை செயலகமா? தவெகவின் கட்சி அலுவலகமா? குதிரை பேரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தவெக அரசு முன்வர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications