புதுக்கோட்டை: புத்தாண்டு ஜல்லிக்கட்டு-75 பேர் காயம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாடு பிடிக்க முயன்ற 75 பேர் காயமடைந்தனர்.
வீர விளையாட்டு என வர்ணிக்கப்படும் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் தொடங்கி விட்டது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நேற்று புதுக்கோட்டை மாவட்டம் வேந்தம்பட்டி கிராமத்தில் நடந்தது.
நல்லாண்டி அய்யணார் கோவில் திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி இந்த ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியுடன், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகளுக்கேற்ப இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட டி.ஆர்.ஓ. பாஸ்கரன் நிகழ்ச்சியைக் கண்காணித்தார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை பல மாடு பிடி வீரர்கள் துணிச்சலுடன் அடக்கினர்.
காளை அடக்கும் போது 75 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர் அவர். மாடு பிடி வீரர்களைத் தாண்டி ஓடி வந்த மாடு குத்தியதில் இவர் காயமடைந்தார்.












Click it and Unblock the Notifications