ஜமா, வாழை, கொட்டுக்காளி.. எல்லாம் என்ன மாதிரி படம்! விருது கொடுக்க தெரியல.. குமுறும் ரசிகர்கள்!
சென்னை: 72வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தன. இதில், தமிழில் சிறந்த திரைப்படம் என தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' திரைப்படத்திற்கு விருது கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே ஆண்டில் வெளியான மிகச்சிறந்த தமிழ் திரைப்படங்களை விருது தேர்வு குழுவினர் கண்டுகொள்ளாதது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருகின்றனர்.
விருதுகள் கலைகளை ஊக்குவிக்க பயன்பட வேண்டும். ஆனால், 'ராயன்' திரைப்படத்திற்கு விருது வழங்கியதன் மூலம்.. திரைப்பட விருதுகள் எந்த மாதிரியான கலையை ஊக்குவிக்கிறது? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

ஜமா திரைப்படம்!
தமிழர் பாரம்பரியத்தில் கூத்து மிக முக்கியமானது. அந்த கூத்து கலையில் இருக்கும் சாதிய ஒடுக்குமுறையை உண்மைக்கு மிக நெருக்கமாக காட்டிய படம்தான் ஜமா.
வேலூர், திருவண்ணாமலை போன்ற வட ஆற்காடு மாவட்டத்தில் இன்றும் கூத்து கலையை நம்பி மட்டுமே ஒரு பிரிவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். என்னதான் சினிமா மக்களை ஆட்கொண்டிருந்தாலும், கூத்து இல்லாத திருவிழா.. உப்பில்லாத சோறு போல.. சப்புனுதான் இருக்கும். அந்த அளவுக்கு இந்த மாவட்ட மக்களிடத்தில் கூத்து ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இப்படிப்பட்ட கூத்து கலையில் கூட சாதி பாகுபாடுகள் இருக்கிறது என்பதை மிக அழகாக சலிக்காத திரைப்படமாக 'ஜமா' என்கிற பெயரில் பாரி இளவழகன் கொடுத்திருந்தார்.
உலகத்தரம்
இந்த படத்தில் கதாநாயகன் அர்சுணன் வேடம் கட்டும்போது.. படம் பார்க்கிற நாமே அதை கட்டி ஆடுவதை போன்ற ஒரு உணர்வு ஏற்படும். வெறுமென சாதிய அடக்குமுறையை பற்றி மட்டும் பேசாமல், அதை உடைத்து எழும் தைரியத்தை காட்டும் படமாக இது இருந்தது. உலக தரம் அளவுக்கு இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. தமிழ் சினிமா படைப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்திற பெருமை ஜாமா திரைப்படத்திற்கு உண்டு. ஆனால், எந்த விருதும் கொடுக்கப்படவில்லை.
கொட்டுக்காளியை எப்படி மிஸ் பண்ணாங்க?
அதேபோல கொட்டுக்காளி.. காதல், ஏமாற்றம், சாதி, ஊர் மக்கள், ஆணவக்கொலை, ஆணாதிக்கம் என பலரும் தொட பயந்த டாப்பிக்கை எடுத்து.. உயிரோட்டமாக இந்த படம் கொடுத்திருந்தது. சொந்த சாதியை தவிர வேறு சாதியில் திருமணம் செய்பவர்களை சொல்லும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். அதை அப்படியே காட்டினால் கசக்குது போல.. எனவேதான் இந்த திரைப்படத்தையெல்லாம் விருது குழுவினர் கண்டுக்கொள்ளாமல் தவிர்த்துவிட்டனர் என்று ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
விக்கெட் ஆன லப்பர் பந்து!
மேலே சொன்ன படங்கள் கொஞ்சம் ராவாக இருக்கும் என்பதால், ஜனரஞ்சக ரசனை கொண்டவர்களுக்கு இப்படங்கள் பிடிக்க வாய்ப்பில்லைதான். ஆனால் லப்பர் பந்து படத்தையெல்லாம் எப்படியா மிஸ் பண்ணீங்க? என நெட்டிசன்கள் விருது குழுவினரை ஏகத்தும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதே சாதிய இறுக்கம்.. ஆனால் சூப்பரான ஸ்டோரி. இரண்டு சமூகங்களும் எப்படி யதார்த்த வாழ்க்கையில் ஒன்று சேர்கின்றன.. அப்படி சேர்வது ஏன் முக்கியம்? அதில் என்ன பிரச்சனைகள் இருக்கின்றன? என்பதை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி கொடுத்த படம்தான் லப்பர் பந்து. இதுக்கெல்லாம் விருது இல்லைன்னா.. அப்புறம் அது என்ன விருதோ? என்றும் கலாய்க்க பலரும் தொடங்கியிருக்கின்றனர்.
ஜெயித்திருக்க வேண்டிய ஜே.பேபி!
சரிங்க இந்த சாதியெல்லாம் எனக்கு வேணாம்.. சண்டை, வெட்டுக்குத்து இதெல்லாம் இல்லாம நல்லா நச்சுனு ஒரு படம் வேணும் என்று கேட்டால்.. அவர்களுக்காவே தமிழ் கலைஞர்களால் கொடுக்கப்பட்ட படம்தான் ஜே.பேபி.
மனநலம் பாதிக்கப்பட்ட அம்மாவை தொலைத்த மகன்.. மொழி தெரியாத, ஊர் பேர் தெரியாத இடத்தில் சிக்கிக்கொண்ட அம்மா.. இவர் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. தினம் தினம் என் வீட்டிலும், உங்கள் வீட்லும் நடக்கும் பிரச்சனையை மையப்படுத்திதான் கதைக்களம் இருக்கும். இந்த படத்தை பார்த்து அழாதவர்களே இருக்க முடியாது. இதெல்லாம் சிறந்த படமா உங்க கண்ணுக்கு தெரியதா ஜட்ஜ் ஐயா? என்கிற கேள்விக்கு.. மௌனம் தான் பதிலாக வருகிறது.
இவை தவிர.. வாழை, தங்கலான், மகாராஜா, மெய்யழகன் இந்த படங்கள் எல்லாம் சிறந்த படங்களாக தெரியவில்லையா? என்றும் கேள்விகள் எழுகின்றன. இதில் மகாராஜா, மெய்யழகன் படங்களுக்கு விருது வழங்கப்பட்டிருந்தாலும் அவை, சிறந்த படங்கள் என்பதற்காக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
