2010ல் கலக்கப் போகும் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான்!
பெய்ஜிங்: 2010-ம் ஆண்டு உற்பத்தித் துறையில் சீனா பல சிகரங்களைத் தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் மீட்சியைச் சந்திக்கும் என்றும் இதில் இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவின் பங்களிப்பே பிரதானமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ப்ளூம்பெர்க்கின் பொருளாதார நிபுணர்கள் குழு கணிப்பின்படி, சீனா இந்த ஆண்டின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக வருமாம். காரணம், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தைச் சமாளிக்க மிகச் சிறப்பான முறையில் நிதிச் சலுகைகளை அறிவித்து அந்த நாடு கையாண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த மாதம் 55.2 சதவிகிதமாக இருந்த சீனாவின் Purchasing Managers Index, டிசம்பரில் 56.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உற்பத்தியில் நல்ல முன்னேற்றணும், பொருள்களின் தரம் உயர்த்தப்படுவதில் கவனமும் செலுத்தப்படுகிறது.
இந்த வளர்ச்சி இன்னும் அதிகமாகும் என்றும், 2010 நிதியாண்டில் 8.8 சதவிகிதம் அளவு சீனப் பொருளாதாரம் உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் இன்னும் கூட 2 சதவிகித வளர்ச்சியை எட்டமுடியாமல் சிரமப்பட்டு வருகிறது.
ஏற்றுமதியைப் பொறுத்தவரை கடந்த நவம்பரில் 53.6 சதவிகிதமாக இருந்து, டிசம்பரில் 52.6 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் ஏற்றுமதிப் பொருள்களின் விலையில் 2 சதவிகித உயர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ஏற்றுமதியில் லேசான குறைவு ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது சீனா.
அதே நேரம் இந்தியாவும் சீனாவுக்கு நிகரான வளர்ச்சியைப் பெறும் என்றும், 2010-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் மீட்சிக்குத் திரும்புவதில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான்தான் பெரும் பங்கு வகிக்கப் போகின்றன என்று ஷாங்காய் வங்கி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications