ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்-கருணாநிதி
சென்னை: தேர்தல் வந்தால் மட்டும் இலவச வேட்டி-சேலை திட்டத்தை அமலாக்கிவிட்டு, தேர்தல் இல்லாத நேரங்களில் அந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தவர் ஜெயலலிதா என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.256 கோடி செலவில் 3.28 கோடி ஏழை-எளியோருக்கு இலவச வேட்டி- சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்த விழா கடந்த காலங்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு பெரும் திட்டமாக நலிந்தோர்க்கு பொங்கல் விழாவினை முன்னிட்டு வழங்குகின்ற வேட்டி-சேலைகளை தொடர்ந்து வழங்குகின்ற வகையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியாகும். இடையிலே 2001ம் ஆண்டு இந்த வேட்டி-சேலைகள் வழங்குகின்ற திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஏனென்றால் தேர்தல் முடிந்து 2001ம் ஆண்டு வேறு ஆட்சி வந்தது. அவர்கள் இந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். நாம் இப்படி நிறுத்தியிருந்தால், வாரந்தோறும் சென்னையிலே, திருச்சியிலே, மதுரையிலே, வேலூரிலே, விழுப்புரத்திலே என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கும்.
2001ம் ஆண்டிலே ஏன் இந்த இலவச வேட்டி-சேலை திட்டம் நிறுத்தப்பட்டது என்பதற்கு காரணம், 2002ல் தேர்தல் இல்லை. அதனால் 2001ல் ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
2002ம் ஆண்டு பொங்கல் திருநாளின் போது இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 2003ம் ஆண்டு பொங்கல் திருநாளின் போதும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஏன் நிறைவேற்றப்படவில்லை?.
ஒருவேளை ஏழை, எளியோர் யாருமே இல்லையா? எல்லோரும் வேட்டி-சேலைகளை வாங்குகின்ற அளவிற்கு பெருந்தனம் படைத்தவர்களாக ஆகி விட்டார்களா என்றால் இல்லை.
அந்த இரண்டு மூன்று ஆண்டுகளிலும் வேட்டி-சேலை இலவசமாக வழங்குகின்ற திட்டம் கை விடப்பட்டதற்கு காரணம் அப்போது தேர்தல் ஏதும் இல்லை என்பது தான்.
ஆனால் 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. 2004ம் ஆண்டு தேர்தல் என்றதும் அந்த ஆண்டு இந்த திட்டத்தை மீண்டும் அன்றிருந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றினார்கள். அதையும் அரைகுறையாக நிறைவேற்றினார்கள்.
நம்மைப் பொறுத்தவரையில் தேர்தலுக்காக அல்ல, கழகத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல, கட்சி அரசியலுக்காக அல்ல, நலிந்த மக்கள்-என்னுடைய தமிழ் மக்கள்- ஆடைக்கு அரையாடை தான் அவர்களுக்கு கிடைக்கின்றது என்ற அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்த மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய பொங்கல் கொண்டாடுகின்ற அந்த நாளிலாவது அவர்கள் பூரிப்போடு இருக்க வேண்டும்,
அவர்களுக்குரிய சேலைகள், வேட்டிகளை அணிய வேண்டுமென்ற காரணத்தினாலேயே அத்தகைய உணர்வு நம்முடைய உள்ளத்திலே இருந்த காரணத்தினாலேயே அந்த திட்டத்தைக் கொண்டு வந்தோம். கொண்டு வந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றினோம்.
இன்றைக்கு இங்கே பார்க்கின்றேன். உங்களைப்போல தமிழ்நாடு முழுதும் இருக்கின்ற மக்கள்- இந்த ஆட்சியை நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக நீங்கள் குழுமியிருக்கின்ற காட்சியைப் பார்த்து நான் மெத்தவும் மகிழ்ச்சியடைகிறேன், மன நிறைவுகொள்கின்றேன். இந்த மன நிறைவை, மகிழ்ச்சியை நீங்கள் எனக்கு தொடர்ந்து அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.
ஒரு நாட்டில் ஒரு அரசு, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்த மக்களுக்குத்தான் தொண்டாற்ற வேண்டும். அதை குறை கூறுபவர்களும் இருப்பார்கள். குறை இல்லாமல் ஒரு அரசு இருக்க முடியாது. அதனால் தான் இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்'' என்று திருவள்ளுவர் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
இடித்துச் சொல்லாதவர்கள் இல்லாத ஒரு ஆட்சி யாரும் கெடுப்பவர்கள் இல்லாமலே தானே கெட்டுவிடும் என்று குறள் கூறுகிறது. அந்த குறளை ஏதோ வாசகத்திற்காக மட்டும் சொல்லாமல், அந்த குறளிலே பொதிந்திருக்கிற வாய்மையை, அந்த குறளிலே இருக்கின்ற எச்சரிக்கையை நாங்கள் என்றைக்கும் மறவாதவர்கள் என்ற அந்த நிலையில் அந்த குறளை நினைவுபடுத்திக்கொண்டு மக்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அதனால் தான் குறை இருந்தால் சொல்லுங்கள், கேட்கிறோம். குற்றம் இருந்தால் கண்டியுங்கள், தண்டியுங்கள். அதற்கு பணிகிறோம் என்பது தான் இந்த அரசினுடைய கொள்கையாக, இந்த அரசின் லட்சியமாக இருந்து வருகிறது.
குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லிக்கொண்டிருந்தால் அது ஜனநாயகம் அல்ல. உண்மையிலேயே குறை கண்ட இடத்தில் அதைச் சொல்வது தான் ஜனநாயகம். அதைத் திருத்திக்கொள்வது தான் ஜனநாயகம். குறை இல்லாத ஓர் ஆட்சியை யாரும் எங்கும் காண முடியாது.
நிலவுக்கே களங்கம் இருப்பதாகச் சொல்கிறோம். முழு நிலவாக இருந்தாலும் எங்கேயோ ஒரு கறும்புள்ளி இருக்கத்தான் செய்யும். அதைச் சுட்டிக்காட்டி அந்த அரசோடு ஒத்துழைத்து அதை நீக்குவதற்காகப் பாடுபட வேண்டுமே அல்லாமல், அதையே குற்றமாகச் சொல்லி அந்த குற்றத்தையே பெரிதாக்கி நிலவு பெரிதா, அதிலே இருக்கின்ற களங்கம் பெரிதா என்பதிலே போட்டி போட்டுக்கொண்டு, களங்கத்தைப் பெரிதாக்கி ஆட்சியைக் கவிழ்த்து விடலாம், ஆட்சியை ஒழித்து விடலாம் என்று யாரும் கருதக் கூடாது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications