தமிழர் நிலங்களை திருப்பி தருவேன்-பொன்சேகா 'பல்டி'
கொழும்பு: ராணுவத் தளபதியாக இருந்தபோது, ராணுவத்தால் உயர் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்ட தமிழர் நிலங்களைத் திருப்பித் தர முடியாது என்று வீராவேசமாக பேசிய பொன்சேகா, இப்போது தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்காக, அந்த நிலங்களை அதிபரான பின்னர் திருப்பித் தர நடவடிக்கை எடுப்பேன் என்று ஜகா வாங்கிப் பேசியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் சூடு பிடித்துள்ளது. தமிழர்களின் வாக்குகளைக் கவர பொன்சேகாவும், ராஜபக்சேவும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
வாயில் வரும் உறுதிமொழிகளையெல்லாம் வாரி வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் ராணுவத் தளபதியான பொன்சேகா ஒரு படி கீழே போய் தமிழர்களின் நிலங்களையெல்லாம் திருப்பித் தருவேன் என்று பேசியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொன்சேகா பிரசாரம் மேற்கொண்டார். நல்லூர் முருகன் கோவிலுக்குச் சென்றும் வழிபட்டார்.
பின்னர் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழர்களின் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வளையப் பகுதிகள் நான் அதிபரானதும் கலைக்கப்படும். அந்த இடங்களை தமிழர்களுக்கே திருப்பித் தருவேன். தமிழர்களுக்குச் சொந்தமான கட்டடங்களும் திருப்பித் தரப்படும் என்றார்.
முன்பு ராணுவத் தளபதியாக இவர் இருந்தபோது உயர் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டு ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் நிலங்கள், கட்டடங்கள், கட்டமைப்பு வசதிகள் மீண்டும் திருப்பித் தரப்படுமா என்று பொன்சேகாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அந்த நிலங்களைத் திருப்பித் தந்தால் தங்களது மாவீரர் குடும்பத்தினரை அங்கு விடுதலைப் புலிகள் குடியமர்த்தி விடுவார்கள். எனவே திருப்பித் தரப்பட மாட்டாது என்று முழங்கினார் இதே பொன்சேகா.
ஆனால் இப்போது தமிழர்களின் ஓட்டுக்ககாக கையேந்தி நிற்பதால், மாற்றிப் பேசியுள்ளார் அரசியல்வாதி பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தின் மூன்றில் ஒரு பகுதி நிலத்தை உயர் பாதுகாப்பு வளையமாக கூறி அங்கு ராணுவத்தை ஆக்கிரமிக்க வைத்துள்ளது இலங்கை அரசு. கிட்டத்தட்ட 30 வருடங்களாக இந்த ஆக்கிரமிப்பு தொடருகிறது.
அதேசமயம், 26 சதவீத நிலத்தை ராணுவம்தான் வைத்துள்ளதாக தமிழர்கள் கூறுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தின் ஒரே விமான நிலையமான பலாலி விமான நிலையமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
கிட்டத்தட்ட 30,338 தமிழர் குடும்பங்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளன. 16,027 விவசாயக் குடும்பங்கள் நிலங்களை இழந்துள்ளன. 4436 மீனவர்கள் தங்களது தொழிலை விட்டு துரத்தப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள 47 பள்ளிகள், 246 வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
2007ம் ஆண்டு சம்பூர் பகுதி உயர் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டபோது அங்கிருந்த 4249 தமிழர் குடும்பங்கள் காலி செய்யப்பட்டன. சம்பூர் பகுதியில் இருந்த 19 பள்ளிகள் மூடப்பட்டன. 6000 மாணவர்கள் படிப்பை இழந்தனர்.
18 கோவில்கள், ஒரு சர்ச் ஆகியவை மூடப்பட்டன. சம்பூர் பகுதி மிகப் பெரிய விவசாயம் மற்றும் மீனவப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று அது பாலைவனத்தைப் போல மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்எம்எஸ் மூலம் ஓட்டுக் கேட்கும் ராஜபக்சே!
இந் நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சே, எஸ்எம்எஸ், இன்டர்நெட் மூலம் வாக்கு கேட்க ஆரம்பித்துள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று அனைத்து செல்போன் நெட்வொர்க் மூலம் மக்களிடம் பிரசாரம் செய்தார். இதில், "நான் உங்களுக்கு (மக்களுக்கு) சுதந்திரமான நாட்டை தருவேன். இதன்மூலம் உங்களின் எதிர்காலம் வெற்றிகரமாக அமையும். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், மகிந்த ராஜபக்சே" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப ஒரு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. புத்தாண்டு அன்று ராஜபக்சே 1 கோடியே 26 லட்சம் எஸ்.எம்.எஸ்.க்களை அனுப்பினார். மேலும் இன்டர்நெட் மூலமும் இவர் பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழர் பகுதிகளி்ல் தமிழில் பேசி ஓட்டுக் கேட்கிறார். தொலைபேசிகளில் திடீரென்று இவர் குரல் ஒலிக்கிறதாம்.
இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் எஸ்.எம்.எஸ். மற்றும் இன்டர்நெட் மூலம் பிரசாரம் செய்வது இதுவே முதல் முறை என்கிறது இலங்கை மீடியா.












Click it and Unblock the Notifications