லிபரான் அறிக்கை சட்டத்துக்கு புறம்பானது: பாஜக
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கை சட்டத்துக்கு புறம்பானது என்று மாநில பாஜக துணைத் தலைவர் எச்.ராஜா கூறினார்.
சென்னை ராஜாஜி பொதுநல மையம் சார்பில், லிபரான் அறிக்கை தொடர்பான விவாதம் நடந்தது. அதில் பேசிய ராஜா,
பாபர் மசூதி இடிப்பு குறித்து 3 மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டு அமைக்கப்பட்டது நீதிபதி லிபரான் கமிஷன்.
3 மாதங்களுக்கு பிறகும் 48 முறை கால நீட்டிப்பு, 400 அமர்வுகள் என்று 17 ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கமிஷன் அறிக்கையை தயாரித்துள்ளது. இதற்காக லிபரான் மற்றும் அவருடன் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் மட்டுமே ரூ.8 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின் தயாரிக்கப்பட்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கை, ஏற்கனவே பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக பலர் அளித்த அறிக்கை மற்றும் பத்திரிகை தகவல்களின் கோர்வையாக அமைந்துள்ளது.
இந்த கமிஷன் லக்னெளவிலிருந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அரசின் உத்தரவு. ஆனால் நீதிபதி லிபரான், லக்னெளி போகாமலே இந்த அறிக்கையை தயாரித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், திட்டமிட்ட சதி என்பதற்கு எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்று அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பலருக்கு, அவர்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே, லிபரான் கமிஷன் அறிக்கை சட்டத்துக்கும், நடைமுறைக்கும் புறம்பானது என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications