கஞ்சா வழக்கு-1ம் வகுப்பு சிறுவனை கைது செய்த போலீஸ்
கோவை: கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்த போலீசார், 1ம் வகுப்பு படிக்கும் அப்பெண்ணின் மகனையும் சேர்த்து கைது செய்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை வாய்க்கால்பட்டியை சேர்ந்த சகாயதேவன் மனைவி லட்சுமி 45). இவர் கோவை அருகே அன்னூர் ஓதி மலை ரோட்டில் கஞ்சா விற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
லட்சுமியை கைது செய்த போலீசார், ஒன்றாம் வகுப்பு படிக்கும் லட்சுமியின் மகன் சூர்யாவையும் கஞ்சா விற்றதாகக் கூறி நீதிபதி முன்பாக நிறுத்தினர்.
சிறுவனை பார்த்தது அதிர்ச்சி அடைந்த நீதிபதி வயது சான்றிதழை ஒப்படைக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். சட்டப்படி சிறுவனை கைது செய்தது தவறு என்பதை உணர்ந்த போலீசார் இதுகுறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
சிறுவன் மீதான நடவடிக்கையை ரத்து செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமத்தில் சிறுவன் சேர்க்கப்பட்டான்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கூறுகையில், லட்சுமியை சிறையில் அடைத்த பிறகு சிறுவனை எங்கே தங்க வைப்பது என்ற கேள்வி எழுந்தது. உறவினர்களும் யாரென தெரியவில்லை. எனவே தாயின் பாதுகாப்பில் மகன் இருக்கட்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் சிறுவனை கைது செய்தோம். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தவறுதலாக வழக்குப்பதிவு செய்து இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications