ரூ.50 லட்சம் நில மோசடி-அதிமுக புள்ளி மீது வழக்கு
நெல்லை: திசையன்விளை அருகே 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக அதிமுக பிரமுகர் மற்றும் ஊராட்சித் தலைவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உவரி அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு அதே பகுதியில் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 4 ஏக்கர் நத்தம் நிலம் உள்ளது.
அவரது 4 ஏக்கர் நிலத்தை உவரி அருகேயுள்ள ஓன்றிய கவுன்சிலரும், அ.தி.மு.க முக்கிய பொறுப்பாளருமான கேபிகே செல்வராஜ் தன் சகோதர் மற்றும் 4 பேருடன் சேர்ந்து போலியாக ஆவணங்களை தயார் செய்து தங்களது பெயருக்கு நிலத்தை மாற்றி கொண்டனர்.
தங்கவேல் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதனையறிந்த செல்வராஜ், தங்கவேலிடம் வழக்கினை வாபஸ் பெற்றால் நிலத்தை தந்து விடுவதாக கூறி பத்திரத்தில் ஓப்பந்தம் செய்தார். ஆனால் அதை முறைப்படி பதிவு செய்யவில்லை.
செல்வராஜை நம்பிய தங்கவேல் வழக்கினை வாபஸ் பெற்றார். இதன் பின்னர் கேபிகே செல்வராஜ் மீண்டும் நிலத்தினை தங்கவேல் பெயருக்கு மாற்றி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து தங்கவேல் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரி்த்த ஐகோர்ட் தங்கவேலின் புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடு்க்க நெல்லை எஸ்பி்க்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் கேபிகே செல்வராஜ், அவரது சகோதரரும் கரைசுத்தபுதூர் ஊராட்சித் தலைவராக உள்ள கேபிகே பொன்னையா, மற்றொரு சகோதரரும் வர்த்தக காங் பொறுப்பாளருமான ஜெயக்குமார், சொர்ணம்மாள், பொன்மணி, பெருமாள் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
