இதுவொரு மாநாடா என்று காரி துப்பினார்கள்-துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

Duraimurugan
சென்னை: முல்லைப் பெரியாறு, செம்மொழி மாநாடு, இடைத் தேர்தல்கள் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக சட்டசபையில் இன்று திமுக, அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடந்தது. அவ்வப்போது வாக்குவாதமும் கூச்சல், குழப்பமும் ஏற்பட்டது.

சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாத விவரம்:

திமுக உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன்: 1861ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்திலும், 1952ம் ஆண்டு ராஜாஜி முதல்வராக இருந்த காலத்திலும், 1979ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்திலும் முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் இழக்கப்பட்டன. (அப்போது அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்)

முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து நான் எதிர் தரப்பில் இருந்தபோதும் (இவர் மதிமுகவில் இருந்து வந்தவர்) இந்த அரசை குறை கூறி பேசியதில்லை.

அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன்: எதிர் வரிசையில் அமர்ந்து இருந்தபோது இந்த அரசை இவர் எப்படி விமர்சனம் செய்தார் என்பது நாட்டுக்கு தெரியும். இன்று ஆளுங் கட்சிக்கு சென்றவுடன் இப்படி பேசுகிறார், முதலில் துதிபாடுவதை அவர் நிறுத்தட்டும்.

முதல்வர் கருணாநிதி (குறுக்கிட்டு): செங்கோட்டையன் கூறியது குறித்து ஆராய வேண்டியதுதான். எப்படி என்றால் முல்லை பெரியாறு பற்றி ராமகிருஷ்ணன் இப்போது ஆற்றிய உரையையும் வேறு இடத்தில் இருந்தபோது ஆற்றிய உரையையும், இரண்டையும் வாங்கி படித்து பார்த்து விட்டு எப்படிப் பேசினார் என்பதையும் செங்கோட்டையன் பார்த்து தெரிந்து கொண்டால் நல்லது.

ராமகிருஷ்ணன் பேசுவது அனைவருக்கும் ஏற்புடைய கருத்துதான். அவர் மதிமுகவில் இருந்தபோது கூட இது போன்ற நீண்ட பல விளக்கங்களை அளித்துள்ளார். இவ்வளவு விளக்கமாக பேசுபவர் இங்கிருக்க வேண்டியவராயிற்றே. இவர் எப்படி அங்கு இருக்கிறார் என்று நான் கூட அமைச்சர்களிடத்தில் கேட்டிருக்கிறேன். இப்போது அவர் இங்கே வந்து விட்டார்.அவர் பேசும் கருத்து அனைவருக்கும் ஒப்பானதுதான்.

எனினும் உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்த வழக்கு நடைபெறும் சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கும், கேரள மாநிலத்துக்கும் இருக்கும் பிரச்சனையை மேலும் கருத்துக்களை சொல்லி அதிகப்படுத்த வேண்டாம் என்றும், வழக்குக்கு குறுக்கே பேச வேண்டாம் என்றும் ராமகிருஷ்ணனை கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்: கவர்னர் உரையில் மத்திய அரசை எச்சரிக்கும் விதத்தில் மாநில சுயாட்சி பற்றியும், மாநில உரிமைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக ஏன் இந்த உரிமைகளை பெற முடியவில்லை?. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மத்திய அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போவதாக முதலில் அறிவித்தார்கள். பிறகு கேரள அரசை எதிர்த்து போராட்டம் என்றார்கள். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவருக்கு நெருக்கடி என்றதும் அந்த போராட்டத்தையும் விட்டு விட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த உருப்படியான திட்டமும் கவர்னர் உரையில் குறிப்பிடப்படவில்லை. விலைவாசி உயர்வு 4 மடங்கு அதிகரித்து விட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஓரளவுக்கு விலைவாசி உயர்ந்தபோது ஊட்டியில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது இப்போதுள்ள ஆட்சியாளர்கள் 'கும்பி எரியுது, உடல் கருகுது, குளுகுளு ஊட்டி ஒரு கேடா' என்று கேட்டார்கள். இப்போது விலைவாசி விஷம் போல உயர்ந்திருக்கிறது. எல்லாவற்றுடன் சேர்ந்து வயிறும் எரிகிறது. இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?.

அமைச்சர் பொன்முடி (குறுக்கிட்டு): விலைவாசி ஏறியதால்தான் உங்கள் தலைவி கொடநாட்டில் அமர்ந்திருந்தாரோ?.

அப்போது அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் அன்பழகன்: விஸ்வநாதன் சொன்னது உண்மை தான். இந்த முழக்கத்தை எழுப்பியவர் அண்ணா. அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரும் சேர்ந்து தான் இதை சொன்னார் அவர் விலகி நிற்கவில்லை.

விஸ்வநாதன்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 62 லட்சம் படித்த இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். பல லட்சம் இளைஞர்கள் பதிவு செய்யாமல் உள்ளனர்.இப்போது இளைஞர்களை பாதிக்கின்ற வகையில் ஒரு அரசாணை போட்டு ஓய்வு பெற்ற ஊழியர்களை பணி நியமனம் செய்வது, இளைஞர்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் பொன்முடி: கடந்த கால ஆட்சியில் அரசு பணி நியமன தடை சட்டத்தை கொண்டு வந்து வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கே வேலை இல்லாமல் செய்தவர்கள் நீங்கள். தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான். அதுவும் நிரந்தரமான திட்டமில்லை. இதனால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இதை நன்கு தெரிந்து கொண்டும் உறுப்பினர் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது போன்று பேசுவது 'சாத்தான் வேதம் ஓதுவதை போல' உள்ளது.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: இது பற்றி கவர்னர் உரையில் 59வது பத்தியில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் உரிய நேரத்தில் பணியாளர்களை தேர்வு செய்து அனுப்பாத நிலையில் தற்காலிகமாக ஒரு சில இடங்களில் இப்படி பணி நியமனம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இது நிரந்தரமானதல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஸ்வநாதன்: கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த உள்ளீர்கள். உலகத் தமிழ் அமைப்பு என்ற அமைப்பையே உடைத்து இந்த மாநாட்டை நடத்துகிறீர்கள்.

அமைச்சர் அன்பழகன்: அந்த அமைப்பு செயலிழந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த அமைப்பில் இருந்தவர்கள் பலரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

விஸ்வநாதன்: உள்ளூர் தமிழர்கள் பலரது வாழ்வாதாரம் போய்விட்டது. இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்து விட்டு தமிழை வாழ வைத்து என்ன செய்ய போகிறீர்கள்?. பிரச்சனைகளை திசை திருப்ப மாநாடு நடத்துகிறீர்களா?.

அமைச்சர் அன்பழகன்: ஈழத் தமிழர் பிரச்சனை இருக்கிறது. அதற்காக இன்று காலை விசுவநாதன் சாப்பிடாமல் வந்தாரா?. மாநாடு நடத்துவது அரசின் கடமை. இதன் மூலம் தமிழ் உணர்வு வளர்ந்தால் ஈழத் தமிழர் கஷ்டத்தை நீக்க முடியும். இலங்கை தமிழர்களின் கஷ்டத்தை தீர்க்கும் வகையில் கூட இந்த மாநாடு அமையலாம் அல்லவா?.

விஸ்வநாதன்: உள்ளூர் தமிழர்களின் பாராட்டை கேட்டு புளித்துப் போய் வெளிநாட்டு தமிழர்களை அழைத்து பாராட்டு பெறத்தான் நடத்தப் போகிறார்களா?. அரசு பணத்தில் இந்த மாநாட்டை நடத்துவதால் இதைக்கேட்கிறேன்.

அமைச்சர் அன்பழகன்: கடந்த கால ஆட்சிகளில் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டனவே. அவை ஆட்சியாளர்களை பாராட்டுவதற்காகத்தான் நடந்தனவா?.

அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, நான் சொல்லிய பெயரை வேண்டுமானால் எடுத்து விடலாம் என்று சபாநாயகரிடம் துரைமுருகன் கூறினார்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்: முன்னாள் முதல்வர்கள் பல பேர் இருந்திருக்கிறார்கள். வெறுமனே முன்னாள் முதல்வர் என்றால் பெயர் சொல்லாமல் எப்படித் தெரியும். எனவே பெயரை சொன்னால் என்ன தவறு?.

அப்படியென்றால் முதல்வரின் பெயரை நாங்கள் சொல்லலாமா என்று கேட்டு அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் அவையில் சலசலப்பு நிலவியது.

சபாநாயகர் ஆவுடையப்பன்: சொன்ன அமைச்சரே பெயரை விட்டு விடுங்கள் என்று சொல்லி விட்டார். இதனால் அமைதி காக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: பெயரை வேண்டுமானால் நீக்கி விடுங்கள். ஆனால் அப்போது நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டு தமிழறிஞர்கள், இதுவொரு மாநாடா என்று காரி துப்பி விட்டுச் சென்றார்கள் என்றார்.

துரைமுருகன் இவ்வாறு கூறியதும் அதிமுக உறுப்பினர்கள் ஏதும் சொல்லாமலேயே அவையை விட்டு செல்ல ஆரம்பித்தனர்.

அமைச்சர் பரிதி இளம்வழுதி: அதிமுக உறுப்பினர் விஸ்வநாதன் பேசுவது பிடிக்காமல் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறார்களா?.

அப்போது எதிர்க் கட்சித் தலைவியான ஜெயலலிதா அவைக்குள் வந்தார்.

தொடர்ந்து பேசிய விஸ்வநாதன், இந்த ஆட்சியில் காவல்துறை விருப்பு வெறுப்புடன் செயல்படுகிறது. ஆலடி அருணா கொலை வழக்கை அப்பீல் செய்த போலீசார் தா.கிருஷ்ணன் வழக்கை ஏன் அப்பீல் செய்யவில்லை. போலீசார் எதிர்க்கட்சியினரை பழி வாங்குகிறார்கள் என்றார்.

சபாநாயகர் ஆவுடையப்பன்: உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 30 நிமிடம் முடிந்து விட்டது. உட்காருங்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரனை பேச அழைக்கிறேன்.

ஆனாலும் தொடர்ந்து பேசிய விஸ்வநாதன் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். அதற்கு அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்டோர் அதற்கு விளக்கம் தர, இதனால் வாக்குவாதம் ஏற்படவே அந்தக் கருத்துக்கள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

ஜெயலலிதா: நாட்டு மக்களுக்கு நடந்த உண்மை என்ன என்பது தெரியும்.

அமைச்சர் பொன்முடி: திருநெல்வேலியில் பணம் கொடுத்தது யார்? என்ன நடந்தது? யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் தெரியும். (இதற்கு அதிமுக உறுப்பினர்கள் செங்கோட்டையன், விஸ்வநாதன் ஆகியோர் சில கருத்துக்களை கூறினார்கள். அதற்கு துரைமுருகன் விளக்கம் அளித்தார். அதிமுக ஆட்சியில் நடந்த இடைத் தேர்தல்கள் குறித்து துரைமுருகன் விளக்கினார்.)

ஜெயலலிதா: அமைச்சர் அபாண்டமாக சொன்ன கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் சொன்ன கருத்துக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த சில கருத்துக்களுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்கவே, அவர்களைப் பார்த்து ஜெயலலிதா கையை அசைத்தார். உடனே அதிமுக எம்எல்ஏக்கள் அமைதியாயினர்.

தொடர்ந்து விஸ்வநாதன் பேசி முடிக்கவே, ஜெயலலிதா சட்டசபையிலிருந்து கிளம்பிச் சென்றார்.

அவருடன் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேறினர்.

அப்போது பேசிய வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பேச எழவே, முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டு, காங்கிரஸ் எம்எல்ஏ பேச எழுந்ததும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர் என்றதும் அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+