சட்டசபையில் என்னை புகழ கூடாது-கருணாநிதி கண்டிப்பு
சென்னை: சட்டசபையில் பேசும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்னைப் புகழ்ந்து பேசுவதை விட்டு விட்டு, தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை மட்டுமே கூற வேண்டும் என முதல்வர் கருணாநிதி இன்று கண்டிப்புடன் கூறினார்.
சட்டசபையில் இன்று திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவன் பேசுகையில், முதல்வர் கருணாநிதியை வெகுவாகப் புகழ்ந்து பேசத் தொடங்கினர்.
இதையடுத்து குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். ஆளுங்கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் பேசுகையில், என்னை புகழும் புகழுரைகளைத் தவிர்க்க வேண்டும். தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துரைகளை மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
என்னைப் புகழ்ந்து பேசுவதை விட்டு விட்டு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை மட்டுமே ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் வைக்க வேண்டும்.
ஆளுங்கட்சியினர் வைக்கும் புகழுரைகளை துண்டித்து விட்டு கருத்துரைகளை மட்டுமே அவைக் குறிப்புகளில் ஏறும்படி சபாநாயகரும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
புதிய சட்டசபை-கருணாநிதி ஆய்வு:
இந் நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டப்பேரவை- தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகளை முதல்வர் நேரில் பார்வையிட்டார்.
அப்போது மத்திய அமைச்சர் ராசா, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்கள் சந்திப்பு:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை இன்று தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி சந்தித்தார்.
அப்போது தனது கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் ராணி மங்கம்மாள் காலனியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்பு உரிமையாளர்களுக்கு பத்திரம் பெற உத்தரவிட்டதற்கும், ரூ.4.75 கோடி தள்ளுபடி செய்ததற்கும் நன்றி தெரிவித்தார்.
அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவான டில்லிபாபுவும் அவரை சந்தித்து, தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு தலைமை மருத்துவமனையை விரைந்து அமைக்கக் கோரி மனு அளித்தார்.












Click it and Unblock the Notifications